வங்க கடலில் இன்று உருவாகிறது.. காற்றழுத்த தாழ்வு.. நாளை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!
சென்னை: தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகை, வேதாரண்யம், கடலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் வரும் 24ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்த மூன்று நாட்களுக்கு கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து நவம்பர் 26 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ஆகிய இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். அதே சமயத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்குள் மழை பெய்யும் மாவட்டங்கள்:
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை, ஆகிய ஐந்து மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்