வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு.. 48 மணி நேரத்தில் வலுப்பெறும்.. 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு

Manjula Devi
Dec 17, 2024,10:22 AM IST

சென்னை: வங்க கடல் பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் எனவும், இதனால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கும் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வு தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி இருந்ததால் கடலோரப் பகுதிகளை ஒட்டி உள்ள மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகள் நீரோடைகள்,ஏரிகள், அணைகள், என முழுவதும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 




இந்த வெள்ள நீர் ஊருக்குள் வந்து, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதே சமயத்தில் சம்பா சாகுபடிக்காக பயிரிடப்பட்ட விளை நிலங்களும் மழை நீரில் மூழ்கி அழுகின. இதனால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களை சீர் செய்ய அரசு உரிய மானியங்களை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே வங்க கடலில் மீண்டும் உருவாகும் காற்று சுழற்சி வலுப்பெற்று வடகடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் அறிவித்து வருகிறது.


அதன்படி,தெற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை  5:30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு  நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். பின்னர் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதன் காரணமாக தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கன மழைக்கு நீடிக்கும். குறிப்பாக ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்