தமிழ்நாட்டில்.. இன்று அநேக இடங்களில்.. மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆந்திரா- வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு தென்மேற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக அநேக இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் இதனை ரசித்து வருகின்றனர்.
குறிப்பாக தர்மபுரி மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17,000 கனடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் சவாரி இயக்க ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மேற்கு தமிழகம், மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் அனேக இடங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை ஏற்கனவே அதிகமாகி விட்டது. மேலும் இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்.
இன்று மழை:
கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, தென்காசி, குமரி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், நெல்லை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மழை:
வட தமிழக பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக வெயில் மற்றும் ஆங்காங்கே திடீரென மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் இன்று கேரளாவிலும் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்