24 மணி நேரத்தில் உருவாகிறது.. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. 15ம் தேதி வரை ஒரே மழைதான்!
சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாக இருப்பதால் சென்னையில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் மீண்டும் ஒரு கன மழைக்காலம் வரவுள்ளது. இதற்கான டிரெய்லர் மழை இன்று பெய்யும். 15 முதல் 20 நிமிடம் வரை தீவிரமான மிதமான மழையாக இருக்கும். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு சென்னையில் இரவு அல்லது நாளை காலை மழையின் தீவிரம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் அறிவித்துள்ளார்.
அவர் அறிவிப்பின்படியே தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக அடையாறு, சேப்பாக்கம், மந்தவெளி, எம்ஜிஆர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. சென்னை முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. கூடவே காலையிலிருந்து காற்றும் வீசுகிறது. கடலும் கூட வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதெல்லாம் வங்கக்கடலில் உருவாக போகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் அறிகுறியாகவே தெரிகிறது. இதனால் சென்னையில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் இப்போதே முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி விட்டனர்.
மாலை 4 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய நான்கு மாவட்டங்களில் 4 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளது.
இதற்கிடையே தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு- இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை சென்னையில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று கனமழை
அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மழை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர்,திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய 12 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள்:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது
நவம்பர் 14ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை பரவலாக 27 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்