தமிழ்நாட்டில்.. இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை:தமிழ்நாட்டில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே கன முதல் மிதமான மழை வரை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து படிப்படியாக பருவமழை தீவிரமடைந்து தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதுக்கிடையே தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் நீடித்துவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் மழையின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர பகுதிகளிலும், டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. இது தவிர சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
மதுரை, திருச்செங்கோடு, புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் மழையில் நனைந்தபடி சென்றனர். அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதன் காரணமாக, தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வரும் 13ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கனமழை:
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தென்காசி, சிவகங்கை, தஞ்சாவூர்,நாகை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ,மதுரை, 15 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மணலியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. அதேபோல் மாதவரத்தில் 10 சென்டிமீட்டர், கொளத்தூரில் 8 சென்டிமீட்டர், திருவொற்றியூரில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பொன்னேரி, செங்குன்றம், சோழவரத்தில் தலா இரண்டு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்