தமிழ்நாட்டில்.. அடுத்த ஐந்து நாட்களுக்கு .. மிதமான மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம்

Manjula Devi
Jul 09, 2024,09:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 14ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை சரியான நேரத்தில் தொடங்கி கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குறிப்பாக வடகடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. அத்துடன் பலத்த காற்றும் வீசி வருகிறது.




இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 14ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய  மிதமான  மழையை எதிர்பார்க்கலாம்.


அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: 


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 சென்டிமீட்டர் மழை பதிவானது. தோவாலா, சின்னகல்லாறு தலா 4 சென்டிமீட்டர் மழையும், வால்பாறை மற்றும் மேட்டூரில் தலா மூன்று சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அவலாஞ்சி, சின்கோனா கத்திவாக்கம், மணலியில் தலா 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.