Tamilnadu Rains: 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருக்காம்.. மதுரையிலும் பெய்யுமாம்!

Manjula Devi
Oct 26, 2024,11:12 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அரபிக்கடலில் நிலவிவரும் மேலெடுக்கு சுழற்சி காரணமாகவும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மதுரையில் 2 மணி நேரத்தில்  8 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகள் புகுந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.




 அதேபோல் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது‌. அதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி 3 மணி நேரம் பெய்த தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 


இது தவிர திண்டுக்கல், கோவை, ஈரோடு, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


அதேபோல் குன்னூரில் பெய்த பலத்த மழை காரணமாக, குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதையில் ராட்சத பாறை சரிந்து விழுந்தது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தண்டவாளத்தில் இருந்து  ராட்சத பாதையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி,மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்