வட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் 2 நாட்களுக்கு மிதமான மழை... தெற்கிலும் வாய்ப்பிருக்கு!

Manjula Devi
Sep 23, 2024,06:15 PM IST

சென்னை: வட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது நிலவும் இந்த வெயிலின் தாக்கத்தால் மக்கள் என்ன செய்வதென்று அறியாமல் புலம்பி வருகின்றனர். குறிப்பாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தும்,தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. மேலும் இந்த மாத இறுதியில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.




இதற்கிடையே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 23ஆம் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 


இந்த நிலையில் இன்றும் நாளையும் வட தமிழப் பகுதிகளான சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது வலுவான தரைக்காற்று ஒரு சில இடங்களில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல்  மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், வங்க கடல் பகுதிகள், அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசப்படும் என்பதால் செப்டம்பர் 26ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்தப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்