தமிழகத்தில்.. இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு.. ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளதால் அனேக இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நடவு செய்த நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். உத்திர காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இங்கு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மக்களின் நலன் கருதி இப்பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தும் வருகிறார். வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார காட்பாடி பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவு மட்டுமே 14 சென்டிமீட்டர் மழை பெய்ததால் சாலைகள் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இது தவிர கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் தொடர் மழை காரணமாக தற்போது வெயில் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் இதமான சூழ்நிலையை ரசித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பெரிய குளம் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை:
இந்த நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை:
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு தேதிகளில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவை பொறுத்தவரை கர்நாடகாவில் இன்று முதல் நான்கு நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 18 ஆம் வரை மிதமான மழை நீடிக்கும். கோவை மற்றும் நீலகிரியில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்