காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்து விட்டது.. படிப்படியாக கன மழை குறையும்.. வானிலை மையம்

Manjula Devi
Nov 13, 2024,05:43 PM IST
சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நீடித்து வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக-இலங்கை கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் வடக்கடலோரப்  பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வரும்  நவம்பர் 16ஆம் தேதி வரை கன மழை பெய்யக்கூடும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.



அதன்படி, தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வட தமிழ்நாட்டை ஒட்டி மையம் கொண்டிருந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. 

இந்த நிலையில் வட தமிழகத்தை ஒட்டி நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் வரும் நாட்களில் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும்.

இது தவிர தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்