தமிழின் பெயரால், கடவுளறிய, அரசியல் சாசனத்தின் மீது.. தமிழ்நாட்டு எம்.பிக்கள் பதவியேற்பு உறுதிமொழி!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நேற்று பரபரப்பாக தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாட்டை சேர்ந்த 39 நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களும் பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று எம்பிக்கள் பதவியேற்பு நடந்தது. முதலில் பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், பல்வேறு எம்.பிக்கள் பதவியேற்றனர். நேற்று ஒரே நாளில் 240 எம்பிக்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நாளிலேயே லோக்சபாவில் அமளி துமளியாக இருந்தது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றியதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவையிலும் அவர்கள் முழக்கமிட்டபடி இருந்தனர். முதல் நாளிலேயே கூச்சல் குழப்பத்தோடு ஆரம்பித்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் நாட்களில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களும் பதவியேற்றனர். பிற்பகல் 1 மணியிலிருந்து தமிழ்நாட்டு எம்.பிக்கள் உறுதிமொழி ஏற்றனர். முதலில் சசிகாந்த் செந்தில், டாக்டர் கலாநிதி வீராச்சாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர் பாலு, ஜி செல்வம், எஸ். ஜெகத்ரட்சகன், டி.எம் கதிர் ஆனந்த், கே. கோபிநாத், ஏ மணி, சி. என் அண்ணாதுரை, எம். எஸ் தரணி வேந்தன், டி ரவிக்குமார், டி மலையரசன் ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர்.
அவர்களைத் தொடர்ந்து டி.எம் செல்வகணபதி, பி.எஸ் மாதேஸ்வரன், கே.இ பிரகாஷ், கே.சுப்பராயன், ஆ ராசா, பி.கணபதி ராஜ்குமார், கே.ஈஸ்வர சுவாமி, ஆர். சச்சிதானந்தம், எஸ். ஜோதிமணி, துரை வைகோ, அருண் நேரு, எம்.கே விஷ்ணு பிரசாத், திருமாவளவன், ஆர். சுதா உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
இதேபோல வி. செல்வராஜ், எஸ் முரசொலி, கார்த்தி பி.சிதம்பரம், சு. வெங்கடேசன், தங்க தமிழ்செல்வன், பி.மாணிக்கம் தாகூர், கே. நவாஸ் கனி, கனிமொழி கருணாநிதி, டாக்டர். ராணி ஸ்ரீகுமார், ராபர்ட் ப்ரூஸ், விஜய் வசந்த் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
அனைத்து தமிழ்நாட்டு எம்.பிக்களும் தமிழில் உறுதிமொழி ஏற்றனர். பலரும் தமிழின் பெயரால் உறுதிமொழி ஏற்றனர். மயிலாடுதுறை எம்.பி. சுதா, தமிழ்க் கடவுள் முருகன் பெயரால் உறுதிமொழி ஏற்றார். 2வது முறையாக எம்.பியாகியுள்ள கனிமொழி, உளமாற என்று கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.