சென்னை எண்ணூர்.. விடாமல் துரத்தும் துயரங்கள்.. நள்ளிரவில் கேஸ் கசிவு.. உர ஆலையை மூட உத்தரவு

Su.tha Arivalagan
Dec 27, 2023,05:54 PM IST

சென்னை: சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து (உரத் தொழிற்சாலை) அம்மோனியம் வாயுக் கசிவு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வட சென்னையில் உள்ள  எண்ணூரில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் பிரச்சினைகளும் தலைவிரித்தாடி வருகின்றன. சுற்றுச்சூழல், நீர் மாசும் அதிகம். இங்குள்ள சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து சமீபத்தில் கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்ததை நினைவிருக்கலாம்.


இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இன்னொரு பிரச்சினை மக்களை பதற வைத்து விட்டது. கோரமண்டல் நிறுவனத்திற்கு  கடல் மார்க்கமாக பைப் லைன் மூலமாக அம்மோனியா வாயு வருகிறது. இந்த பைப்லைனில் பழுது ஏற்பட்டு காஸ் கசிவு ஏற்பட்டது. இரவில் காஸ் கசிவு ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.




பலருக்கு மூச்சுத் திணறல், தொண்டை எரிச்சல், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்டோரை ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி அருகில் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். 50க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேருக்கும் மேலானோர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த துயரம் இப்பகுதியில் தொடர் கதையாக உள்ளதாக  மக்கள் குமுறுகிறார்கள். இங்குள்ள பலருக்கும் மூச்சுத் திணறல் பிரச்சினை இருக்கிறது. இதற்குக் காரணம் இந்த நிறுவனம்தான். அடிக்கடி காஸ் கசிவு ஏற்படும். எங்களால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. வாழவே முடியாத நிலைக்கு இந்தப் பகுதி போய் விட்டது என்று பொதுமக்கள் குமுறுகிறார்கள்.


நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இந்க காஸ் கசிவு தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதற்கிடையே, இந்த காஸ் கசிவு குறித்து ஆய்வுக் குழு விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவரை இந்த நிறுவனத்தை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.