புயல் வெள்ள பாதிப்பு.. ரூ. 1000 கோடி நிவாரண தொகுப்பு.. யார் யாருக்கு என்ன கிடைக்கும்?

Meenakshi
Dec 30, 2023,10:01 PM IST

சென்னை: புயல், மழை, பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழில்கடன் வழங்க ரூ.1000 கோடி நிவாரண தொகுப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.


டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 17, 18 ஆம் தேதிகளில் பெய்த கன மழையின் காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.


வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளும், கூடுதலாக அவர்களுக்கு பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ரூ. 1000 கோடி நிவாரண தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.




இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:


புயல், வெள்ளம் பாதித்த 8 மாவட்டங்களில் 4000 சுய உதவி குழுக்களுக்கு புதிய கடனும், சிறு வணிகர்களுக்கு ரூ. ஒரு லட்சம் சிறப்புக் கடனும் வழங்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 350 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். சேதமடைந்த வீடுகளை சரிபார்க்க  ரூ.385 கோடி ஒதுக்கப்படும்.


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உப்பளத்தொழிலாளர்களுக்கு ரூ.3000 நிவாரணத் தொகை வழங்கப்படும்.ரூ. 10000 வரை 4 சதவீதம் வட்டியும், ஒரு லட்சம் வரை 6 சதவீதம் வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.


பெருமழை  மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 17000 கால்நடைகளும், ஒரு லட்சத்திற்கும் மேல் கோழிகளும் உயிரிழந்தன. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு எருமைக்கு 37,500 வரையும் ஆடு செம்மறி  ஆடு ஒன்றிற்கு 4000 ரூபாய் வரையிலும்,கோழி ஒன்றுக்கு நூறு ரூபாய் வரையிலும் வழங்கப்படும். கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்கிட வசதியாக ரூபாய் 1.50 லட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும்.


தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களுக்கு சுமார் 22,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான நிவாரணமாக மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடனும், வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு கடன் வழங்கப்படும்.


3046 மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு 917 வாகனங்கள் இப்பொழுது பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2129 வாகனங்களுக்கான பொழுது பார்க்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன என கூறப்பட்டுள்ளது.