விடாமல் மிரட்டும் கன மழை.. 4 மாவட்டங்களுக்கு நாளையும் அரசு பொது விடுமுறை

Su.tha Arivalagan
Dec 04, 2023,05:42 PM IST

சென்னை: மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை விடாமல் பெய்து வருவதால், இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த மாவட்டங்களின் நிலைமை படு மோசமாக இருப்பதால் நாளையும் பொது விடுமுறை விடப்படுகிறது.


மிச்சாங் புயல் மிக மோசமான பாதிப்பை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையிலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த சென்னையும் விடாமல் பெய்து வரும் மழையில் மிதக்கிறது. வரலாறு காணாத மழைப்பொழிவை மிச்சாங் புயல் ஏற்படுத்தி விட்டது.




சென்னை மாநகரிலும், அதன் புறநகர்களிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாளையும் அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. கல்வி நிறுவனகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர் மழையால் சென்னை நகரின் பல பகுதிகளிலும் வெள்ளத்தில் மிதக்கின்றன. கார்கள் வெள்ள நீரில் மிதப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. கிட்டத்தட்ட 2015ம் ஆண்டு வந்த வெள்ள பாதிப்பு போலவே இப்போதும் அதிக பாதிப்பை சென்னை மற்றும் புறநகர்கள் சந்தித்துள்ளன.