ஆன்லைன் ரம்மி தடை மசோதா .. ஆளுநர். ஆர்.என். ரவி ஒப்புதல்

Su.tha Arivalagan
Apr 10, 2023,04:47 PM IST
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இன்று காலைதான் ஆளுநரின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

ஆன்லைனில் ரம்மி விளையாட்டை பல்வேறு சூதாட்ட நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இதில் சிக்கி பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மக்களின் வாழக்கை, உயிர், பணத்தை உறிஞ்சும் இந்த ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.



இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி சூதாட்டத்தைத் தடை செய்து மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீண்ட காலம் இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவி, கடந்த மாதம் 6ம் தேதி விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பி விட்டார். இது பெரும் சர்ச்சை மற்றும் விவாதத்தைக் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு சட்டசபையில் இதே மசோதாவை திரும்ப நிறைவேற்றி அன்றே ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

வழக்கமாக 2வது முறை மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பது நடைமுறையாகும். இருப்பினும் இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் ஆளுநர். இந்த நிலையில் இன்று காலை ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மீது உறுப்பினர்கள் ஆவேசமாக பேசியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் ரம்மி மசோதாவை  ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கும் செய்தி வெளியானது. இந்த மசோதாவில் உள்ளபடி, ஆன்லைனில் ரம்மி விளையாட தடை விதிக்கப்படுகிறது. மீறி விளையாடினால் 3 மாத சிறைத்  தண்டனை அல்லது ரூ. 5000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும். என்பது குறிப்பிடத்தக்கது.