கால்நடைகளுக்கு நன்றி.. காணும் பொங்கலோடு அறுவடைத் திருநாளுக்கு விடை கொடுத்த தமிழ்நாடு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாள் இன்றுடன் முடிவுக்கு வந்தது. போகியில் ஆரம்பித்த பொங்கல் பண்டிகை காணும் பொங்கலோடு நிறைவு பெறுகிறது.
தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடும் பண்டிகைகளிலையே முத்திர விழாவாக பார்க்கப்படுவது பொங்கள் திருநாள்தான். அறுவடைத் திருநாள் என்றும் உழவர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது இந்த தைப் பொங்கல் விழா.
தமிழ்நாட்டில் அதிக நாட்கள் நடைபெறும் திருநாளும் இதுதான். போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என்று நான்கு நாள் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் ஜனவரி 13ம் தேதியிலிருந்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது.
எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் கூடுதல் நாட்கள் விடுமுறை கிடைத்ததால் மக்களின் உற்சாகத்திற்கும், ஜாலிக்கும் அளவே இல்லை. சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் படையெடுத்துச் சென்றதால் சென்னை நகரம் வழக்கம் போல வெறிச்சோடிக் காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த பொங்கல் விழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நாளையும் அரசு விடுமுறை விடப்பட்டிருப்பதால் அரசு அலுவலகங்கள் திங்கள்கிழமைதான் மீண்டும் திறக்கின்றன.
பொங்கல் திருவிழாவில் முக்கியமானது ஜல்லிக்கட்டுதான். 14ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, 15ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு, 16ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என தமிழ்நாடே களை கட்டியிருந்தது. இத்தோடு திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டும் நேற்று கோலாகலமாக நடந்தேறியது. இன்னும் பல ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து விருந்து படைக்கக் காத்துள்ளன.
இந்த நிலையில் இன்று காணும் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம் செல்லும் பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து மாமல்லபுரம் பேருந்து நிலையம் வரை சிற்றுந்து மூலம் இணைப்பு பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளுக்கும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் விதம் விதமான கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள், வீர விளையாட்டுகள், பெண்களுக்கு, குழந்தைகளுக்கு என்று விதம் விதமான போட்டிகள் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தன.
பொங்கல் சமயத்தில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இருப்பினும் பொங்கலை எந்த வகையிலும் சீர்குலைக்காமல் பெரிய அளவிலான மழை எங்குமே இல்லை. இதுவும் மக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது.
இப்படியாக இந்த வருடத்து பொங்கல் விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அடுத்து வெகு அருகில் வேறு எந்த பெரிய கொண்டாட்டமும் இல்லாததால் மக்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நாட்களை சிறப்பாக கொண்டாடும் மன நிலையில் ஹேப்பியாக வலம் வந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்