தமிழகத்தில்.. சிஏஏ குடியுரிமை சட்டத்தை.. கால் வைக்க விடமாட்டோம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி!
சென்னை: சி ஏ ஏ குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் கால் வைக்க விடமாட்டோம் என்றும், சிஏஏ சட்டமானதற்கு முழுமுதற் காரணம் அதிமுக நாடாளுமன்றத்தில் அதை ஆதரித்து ஓட்டுப் போட்டதுதான் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அடுத்த 7 நாட்களுக்குள் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கர் கூறியுள்ளார். இதையடுத்து நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த தொடர் போராட்டத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இஸ்லாமியர்கள் மிகப் பெரிய அளவில் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் சிஏ ஏ சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என எனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.
இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சி ஏ ஏ (citizenship amendment act) என்றால் என்ன?
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் சிஏபி எனப்படும் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, பரபரப்பான விவாதத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்த பிறகு இது குடியுரிமை திருத்த சட்டமாக மாறியது.
1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில்தான் திருத்தம் செய்யப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பே இந்தியாவுக்கு வந்து அடைக்கலம் புகு்நத, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மதச் சிறுபான்மையினருக்கு (அதாவது இந்துக்கள், சீக்கியர்கள், பெள்ததர்கள், ஜைனர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள்) குடியுரிமை வழங்கப்படும். இந்த பட்டியலில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை.
மேற்கண்ட மதங்களை சார்ந்த சமூகத்தினர்கள் சிறுபான்மையினராக வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் மதரீதியாக தாக்குதலுக்குள்ளாவதால், வெளிநாடுகளில் இருந்து அகதியாக இந்தியாவை நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திருத்தியதாக பாஜக அரசு தெரிவித்தது. ஆனால் இந்த பட்டியலில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இஸ்லாமிய மதத்தை சீர்குலைக்கும் நோக்கோடு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் இந்த சட்டத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்கினர். இதனால் மாணவர்கள், இஸ்லாமியர்கள், பல்வேறு சமூக அமைப்பினர்கள,எதிர் கட்சித் தலைவர்கள் என நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினர். இடையில் கொரோனா குறுக்கிட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் சாந்தனு தாக்கர் கூறியதால் தற்போது மீண்டும் சிஏஏ பிரச்சனை தலை தூக்க தொடங்கியுள்ளது.