பட்ஜெட் உரையை புறக்கணித்தது ஏன்? - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

Su.tha Arivalagan
Mar 14, 2025,05:25 PM IST

சென்னை : தமிழக பட்ஜெட் உரையை புறக்கணித்து, அதிமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது. தங்களின் புறக்கணிப்புக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.


தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை ஆரம்பித்தபோது அதிமுக உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து உரத்த குரலில் ஏதோ கூறினர். ஆனால் அதை சபாநாயகர் அப்பாவு அனுமதிக்கவில்லை. பட்ஜெட் தாக்கல் நடைபெறவுள்ளது. வேறு பேச முடியாது என்று அவர் கூறினார்.




சபாநாயகரின் இந்த பேச்சைத் தொடர்ந்து பட்ஜெட் உரையைப் புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள், திமுக அரசு மீதான மதுபான ஊழலை கண்டித்து தாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தனர்.


இத குறித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டாஸ்மாக் துறையில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ஆனால் டாஸ்மாக் துறையில் ரூ.40,00 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கலாம். அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தியே நாங்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.


வரும் நாட்களில் இந்த டாஸ்மாக் விவகாரத்தை வைத்து அதிமுக புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.