2026 சட்டசபைத் தேர்தல்.. பாஜக அல்லாத வலுவான கூட்டணி.. எப்படி அமைக்கும் அதிமுக.. இதுதான் பிளானா?
Jul 11, 2024,06:54 PM IST
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் பாஜக அல்லாத கூட்டணியை அமைப்போம். மிகவும் வலுவான கூட்டணியை அமைப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சித் தலைவர்களிடம் உறுதிபடக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
லோக்சபா தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது. அதிமுக கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இந்த தேர்தலில் ஏமாற்றமே மிஞ்சியது. இரு கூட்டணிகளும் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. மறுபக்கம் நாம் தமிழர் கட்சி தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்து 8.20 சதவீத வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக உயர்வு கண்டுள்ளது.
விரிசல் விட்ட அதிமுக பாஜக கூட்டணி:
தேர்தலுக்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பே அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் விட்டு விட்டது. பாஜகவை கூட்டணியிலிருந்து விலக்குவதாக அதிமுக அறிவிக்கவே பரபரப்பு கூடியது. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக மேலிடம் விரும்பினாலும் கூட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை இடையிலான கருத்து மோதலால் இது நடக்காமல் போய் விட்டது.
இரு கட்சிகளும் கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் இணைந்து களம் காணலாம் என்று ஆர்வத்துடன் காத்திருந்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பெரும் குழப்பமடைந்தன. கடைசியில் பாமகவை, பாஜக தன் பக்கம் இழுக்க, தேமுதிகவை அதிமுக கொண்டு போய் விட்டது. இப்படி பலம் சிதறி போட்டியிட்டன இரு கூட்டணிகளும். விளைவு.. பெரும் தோல்வியை சந்தித்தனர். இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு கூட்டணி சரியில்லாமல் போட்டதே காரணம் என்று அதிமுக தரப்பிலும், பாஜக தரப்பிலும் கருத்துக்கள் கிளம்பின. அதிமுகவிலிருந்துதான் முதல் குரல் கிளம்பியது. இதை பாஜகவிலிருந்து தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் எதிரொலித்தனர்.
ஒன்றிணையுமா அதிமுக?:
இந்தக் குரல்கள் தற்போது அடங்கி விட்ட நிலையில் அடுத்து அதிமுகவை இணைக்க வேண்டும் என்ற குரல்கள் புறப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை சசிகலா, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கையில் எடுத்துள்ளனர். ஆனால் இந்தக் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டார். மேலும் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தான் பாஜகவுடன் கூட்டணி கிடையாது, வலுவான கூட்டணியுடன் 2026 தேர்தலை சந்திப்போம் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதுதான் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைக்க வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் திமுகவை வீழ்த்த முடியும் என்பதுதான் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பலரின் கருத்தாக உள்ளது. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் கூட இதே கருத்தில்தான் உள்ளன. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது பலரையும் குழப்பியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் கணக்கு என்ன?:
எடப்பாடி பழனிச்சாமி என்ன கணக்கில் உள்ளார்.. அவர் போடும் திட்டம் என்ன என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மனதில் ஒரு கணக்குப் போட்டு வைத்துள்ளதாக சொல்கிறார்கள். அதனால்தான் பாஜக கிடையாது.. ஆனால் வலுவான கூட்டணி அமையும் என்று அவர் சொல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அது இதுதானாம்..
1. கடைசி நேரத்தில் ஓ.பி.எஸ்ஸை மட்டும் அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் உள்ளது. சசிகலா, டிடிவியை விட்டு விடுங்கள்.. ஆனால் ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்ப்பது குறித்து பரிசீலியுங்கள். அப்படி செய்தால், உங்கள் மீதான தென் மாவட்ட அதிருப்தி சற்று விலகும் என்று எடப்பாடியாருக்கு வேண்டியவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனராம். இதை கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பரிசீலனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கடந்த லோக்சபா தேர்தலின்போதே இழுக்க முயன்றது அதிமுக. ஆனால் அது ஒத்துவரவில்லை. திருமாவளவன் தனது நிலைப்பாட்டில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்ததால் அது சாத்தியமாகவில்லை. ஆனால் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அந்த முயற்சியை மேற்கொள்ள அதிமுக முயலுமாம். ஒரு வேளை திமுக தரப்பில் கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் போனாலோ அல்லது வேறு ஏதாவது அதிருப்தி ஏற்பட்டாலோ கண்டிப்பாக நம்மிடம்தான் விடுதலைச் சிறுத்தைகள் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. விடுதலைச் சிறுத்தைகள் வசம் தர்போது 2.25 சதவீத வாக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
3. பாஜக கூட்டணியிலிருந்து பாமகவை தன் பக்கம் இழுக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாம். இதனால்தான் விக்கிரவாண்டி தொகுதியில் அது போட்டியிடாமல் விட்டுக் கொடுத்து விட்டதாகவும் சொல்கிறார்கள். அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காரணம், கடந்த தேர்தலை விட இந்த முறை அங்கு வாக்குப் பதிவு சற்று அதிகமாகவே நடந்துள்ளது. எனவே கணிசமான அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களித்திருப்பதாக நம்பப்படுகிறது. எனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் பாமக கேட்கும் தொகுதிகளைக் கொடுத்து கூட்டணிக்குள் இழுத்து விட்டால் வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வலுப்பெறும் என்பது எடப்பாடியாரின் நம்பிக்கையாகும்.
4. இதுவிர இன்னும் 2 பிளான்களை வைத்துள்ளாராம் எடப்பாடியார். அது நடந்தால் அவர் நினைப்பது போல வலுவான கூட்டணியாக அதிமுக உருவெடுக்க வாய்ப்புள்ளது. அது நாம் தமிழர் கட்சியையும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணியில் இணைப்பது. இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் நடந்தால் நிச்சயம் அதிமுக கூட்டணி வலுப்பெற்று விடும். விஜய் கூட்டணிக்கு வருவாரா அதுவும் அதிமுக கூட்டணிக்கு வருவாரா என்பது சந்தேகம்தான். ஒரு வேளை வந்தால் அது அதிமுகவுக்கு நல்ல பூஸ்ட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
5. அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியையும் தனது கூட்டணியில் இணைக்க அதிமுக அக்கறை காட்டும். காரணம், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் அந்தக் கட்சி மீதான அனுதாபம் மக்களிடையே உள்ளது. குறிப்பாக வட மாவட்ட தலித் மக்களிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அறுவடை செய்யவும் அதிமுக முயலலாம். எனவே ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கோ அல்லது அவரது குடும்பத்தில் யாருக்கேனுமோ சீட் கொடுத்து கட்சியை கூட்டணியில் இணைக்கவும் அதிமுக முயலலாம்.
பாஜக ஏன் வேண்டாம்?:
இப்படி பல்வேறு திட்டங்களுடன் எடப்பாடியார் இருப்பதால்தான் தெம்பாக பேசுகிறார், பாஜக வேண்டாம் என்று சொல்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக 8 சட்டசபைத் தொகுதிகளிலும், தேமுதிக 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. பாஜக கூட்டணியில் பாமக மட்டும் 3 தொகுதிகளில் முன்னிலை வகித்தது என்பது நினைவிருக்கலாம்.
கூட்டணிக் கட்சிகள் கூட ஒரு சில தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய பாஜகவால் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட கட்சி நமக்கு தேவையா.. அதற்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளை நம் பக்கம் இழுத்தால்தான் நமக்கு லாபம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் சொல்கிறார்கள்.