தென் சென்னையில் தமிழிசை.. கோவையில் அண்ணாமலை போட்டி.. பாஜக வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்

Su.tha Arivalagan
Mar 21, 2024,10:38 PM IST

சென்னை: தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு எதிராக டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பாஜக வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். கோயம்புத்தூர் தொகுதியிலும் திமுக வேட்பாளரை எதிர்த்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை களம் இறக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாட்டிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 7 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியானது. இவர்கள் தவிர பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் 2 கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் பெயர்களையும் பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது.


பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்று வெளியான முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்கள் விவரம்:




நீலகிரி (தனி) - எல். முருகன் 

கோயம்புத்தூர் - அண்ணாமலை 

தென் சென்னை - டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி -  பொன். ராதாகிருஷ்ணன் 

மத்திய சென்னை - வினோஜ் பி. செல்வம்

கிருஷ்ணகிரி - நரசிம்மன்

பெரம்பலூர் - பாரிவேந்தர் (இந்திய ஜனநாயகக் கட்சி)

வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி)


6 தொகுதிகளில் திமுக - பாஜக நேருக்கு நேர் மோதல்:


பாஜக அறிவித்துள்ள 9 வேட்பாளர்களில் 6 பேர் திமுகவை எதிர்த்து நேருக்கு நேர் மோதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் சமீபத்தில்தான் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் ஏ. ராசாவை எதிர்த்து மோதவுள்ளார். தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியனை எதிர்த்து தமிழிசை போட்டியிடவுள்ளார். திருநெல்வேலியில்  நயினார் நாகேந்திரன் மோதவுள்ளார்.  முன்னதாக இவர் தூத்துக்குடியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


வேலூரில் கதிர் ஆனந்த்தை எதிர்த்து ஏ.சி. சண்முகம் களம் காண்கிறார். கடந்த தேர்தலிலும் இவர்கள்தான் மோதினர். பெரம்பலூரில் கடந்த முறை திமுக டிக்கெட்டில் போட்டியிட்ட பாரிவேந்தர் இந்த முறை தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு, வலுவான அருண் நேருவை சந்திக்கவுள்ளார்.