உதயநிதி ஸ்டாலினின் அழகுத் தமிழ்.. மனதாரா பாராட்டிய தமிழறிஞர் மகுடேஸ்வரன்!
சென்னை: தமிழ்நாடு இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலினின் தமிழ்ப் புலமை குறித்து கவிஞரும், தமிழறிஞருமான மகுடேஸ்வரன் வியந்து பாராட்டியுள்ளார்.
தமிழில் பேசத் தெரிந்தவர்கள்தான் இங்கு அதிகம். தூய தமிழில் அல்லது குறைந்தபட்சம் நல்லதொரு தமிழில் எழுதத் தெரிந்தவர்கள் மிக மிகக் குறைவு. இப்படிப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலினின் எழுத்து ஒன்று வைரலாகி வருகிறது. அதுகுறித்து மகுடேஸ்வரன் தனது முகநூலில் போட்டுள்ள பதிவு:
கீழுள்ளது உதயநிதியின் கையெழுத்து என்று அவருடைய முகநூல் பக்கத்தில் காணப்பட்டது. நம்ப முடியாமல் இரண்டு முறை பார்த்தேன்.
இந்தப் பத்தியைக்கொண்டு சில தமிழ்க் குறிப்புகளைச் சொல்ல முடியும் என்பதால் இதனை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். தமிழ்ச்சார்பன்றி வேறு எந்தச் சார்பும் எனக்கில்லை.
யாரானும் எவராயினும் - அன்னாருடைய பேச்சிலும் எழுத்திலும் புழங்கும் தமிழைக் கூர்ந்து நோக்குவேன்.
முதற்கண் அவர் இந்தப் பத்தியைத் தங்கு தடையின்றியும் பிழையில்லாமலும் ஓரளவு அழகாகவும் எழுதியிருக்கிறார். சிறந்த தமிழாசிரியரிடம் தமிழ் பயின்றிருக்கிறார் என்று கணிக்க முடிகிறது.
இங்கே அவர் பிழையில்லாமல் எழுதிய இடங்கள் நல்ல எழுத்தாளரைக்கூட ஏமாற்றிவிடக்கூடியவை. இதழ்களில் எழுதுவோர்கூட ‘சட்டமன்ற தேர்தல்’ என்றே தொடர்ந்து பிழையாக எழுதி வருகின்றனர். இவர் ‘சட்டமன்றத் தேர்தல்’ என்று சரியாக எழுதுகிறார்.
‘பிரச்சாரத் துவக்கம்’ என்பது அடுத்தொரு சரியான வல்லொற்றிடல். பிரச்சாரம் வடசொல் என்பதால் பிரசாரம் என்றுகூட எழுதியிருக்கலாம். ஆனால், அதன் முறையான தற்பவப் பயன்பாடு அறிந்து ‘பிரச்சாரம்’ என்றே எழுதியிருக்கிறார். பிரச்சாரத்திற்கான தமிழ்ச்சொல் பரப்புரை. இனிமேல் அதனை அவர் பயன்படுத்தினால் மேலும் சிறப்பு.
நான் பாராட்ட விரும்பும் ஓரிடம் எண்ணுப்பெயரையும் சாரியையும் பிரித்தெழுதிய இடம். இருபதாம் தேதி என்பதனை எண் பயன்படுத்தி எழுத வேண்டின் என்ன செய்ய வேண்டும் ? இருபதாம் என்பதை எப்படிப் பிரிக்கலாம் ? இருபது + ஆம். இங்கே ஆம், ஆவது போன்றவை சாரியைகள். இரண்டாம் வகுப்பு, கூட்டாஞ்சோறு, பொன்னாம்பூச்சி என்று பல இடங்களில் இந்தச் சாரியை நடுப்படும்.
இருபது என்பதனை 20 என்று எழுதியவுடன் மீதமுள்ள ஆம் என்ற சாரியையைக் கெடுக்காமல் எழுத வேண்டும். ‘20ஆம்’ என்றே எழுதவேண்டும். அப்போதுதான் இருபது + ஆம் = இருபதாம் என்று பொருள்படும். அவ்வாறே எழுதியிருக்கிறார். நாட்டில் பலர் 20ம் என்று எழுதிக்கொண்டிருகிறார்கள். (இருபது + ம் என்றால் இருபதும் என்று வேறு பொருளுக்குப் போய்விடும்.)
‘தொடங்கி கைதானோம்’ என்பது இன்னொரு தொடர். ‘தொடங்கிக் கைதானோம்’ என்று வரலாம்தான். ஆனால், ‘கைது’ பிறமொழிச் சொல் என்பதால் அங்கே வல்லொற்று மிகல் கட்டாயமில்லை. இரண்டும் சரியெனக்கொள்வர். நிறுத்தற்குறிகள் யாவற்றையும் நன்கு பயன்படுத்தியுள்ளார். சிறப்பு, மொழி செழிக்கட்டும் !