பழம்பெரும் கோவில்கள்.. வீரத்தின் விளை நிலம்.. கலைகளின் தாயகம்.. நம் தாய்த் திரு தமிழ் நிலம் (2)

Swarnalakshmi
Apr 15, 2025,02:54 PM IST

- ஸ்வர்ணலட்சுமி 


தமிழ்நாட்டைப் போல ஒரு வளமான பூமியை பார்க்க முடியாது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்று பாடலே இருக்கிறது.   அப்படிப்பட்ட அருமையான தமிழ்நாட்டின் பெருமைகளை இந்த இரண்டாம் கட்டுரையில் காண்போம்.


பழமையான கோவில்கள்: 


தமிழகத்தில் உள்ள பல கோவில்கள்  கலையழகும், கட்டுமானத்திற்காகவும் உலகப் புகழ் பெற்றிருக்கின்றன. மாமல்லபுரம் கடற்கரை கோவில் ,காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் ,மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், தஞ்சை பெரிய கோவில்,  திருவண்ணாமலை கோவில் ,ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் ,கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையம்  ,முருகனுக்கு உடைய அறுபடை வீடு கோவில்கள் - அதாவது திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், ராமநாதபுரம் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் இன்னும் பல கோவில்கள் கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. புனித யாத்திரை தளமாகவும் விளங்குகிறது.


காஞ்சிபுரம் ,கும்பகோணம் போன்ற இடங்களிலும், வெள்ளியங்கிரி மலைக்கோவில் என சி இன்னும்  பல கோவில்கள் தமிழ்நாட்டில் ஆன்மீகம் , கலை, வரலாற்று சிறப்புகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது .இவை அனைத்தும் நம் தமிழ் நிலத்திற்கு பெருமை சேர்க்கின்றது.


உழவர் திருநாள் - பொங்கல் விழா




ஒரு நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான் .வயலில் உழுது, நாற்றுநட்டு, கலை எடுத்து, உரமிட்டு ,நீர்பாய்ச்சி, கண்ணின் கருமணி போல் பாதுகாக்கின்ற உழவனின் பெருமையை சொல்ல ஒரு உகந்த நாள் தான் உழவர் திருநாள்.


இந்த உழவர் திருநாள் தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. பழையன கழிதலுக்காக போகி பண்டிகை ,பொழுது உண்டு வாழ்வோர் களத்து மேடு சென்று ,புதிர் எடுத்து, பொங்கல் இட்டு பகலவனைத் தொழுது, படையல் இட்டு,  பகிர்ந்து அளித்து ,செய்நன்றி செலுத்தும் பொங்கல் திருநாள் ; தன் ரத்தத்தை பாலாக கொடுத்து, உழவனின் தோழனாகவும், உயிர் பால் வழங்கும் தாயாக விளங்கும், மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நன்னாளாக மாட்டுப்பொங்கல்; உறவுகளுடன் சேர்ந்து ஒற்றுமையாக உணவு பரிமாறி கொண்டாடும் காணும் பொங்கல் என்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.


மேலும் தீபாவளி பண்டிகை, கார்த்திகை தீபம் ,சித்திரை திருநாள் என பல பண்டிகைகள் கொண்டாடி மக்கள் தங்கள் உறவுகளோடும் சேர்ந்து அன்பை பரிமாறி உணவு பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்தப் பெருமை தமிழ் நிலத்திற்கு மேலும் மெருகேற்றுகிறது.


வீரம் விளைந்த மண் நம் தமிழ் நிலம்: ஜல்லிக்கட்டு


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை  அடக்கும் திருவிழா தை மாதம் நடைபெறுகிறது. தமிழர்களின் மரபு வழி வீர விளையாட்டு இது ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் ,மஞ்சுவிரட்டு என்ற பல பெயர்கள் கொண்ட ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு வாய்ந்த -மதுரை, அலங்காநல்லூர் , பாலமேடு ,அவனியாபுரம், சிவகங்கை ,தேனி ,திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் தமிழ் நிலத்திற்கு பெருமை சேர்க்கின்றன  . 2017ல் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க கோரி நடைபெற்ற போராட்டங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தன என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம்.


சிலம்பம்:


சிலம்பம் என்பது தமிழில் மரபு கலை மற்றும் தற்காப்பு கலை ஆகும் .இது ஒரு வீர விளையாட்டு. கம்பு (தடி )சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி சிங்கம், புலி போன்ற விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள சிலம்பம் பயன்படுத்தப்பட்டது.


அலங்கார சிலம்பம் என்பது பார்ப்பதற்கு அழகாக இருப்பதற்கும், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும் சுற்றக்கூடியது.* வாரிசை சிலம்பம் என்பது அடிப்படைத் தாக்குதல், மற்றும் தற்காப்பு உத்திகளை கற்றுத்தரும் பாரம்பரிய  பாணி ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினை தடுத்து, தடியை கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் ,மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு விரிவான தற்காப்பு கலையாகும்.   *பல்லவர்கள் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் போன்ற தமிழ் மன்னர்களின் ஆட்சி காலத்தில் சிலம்பம் வளர்ந்து போர்களில் முக்கிய பங்கு வகித்தது.


கரகாட்டம்:


தமிழர்களின் பாரம்பரிய கலை அடையாளம் "கரகாட்டம்" என்ற நாட்டுப்புற நடன கலை ஆகும் .இன்று வரையிலும் கரகாட்டம் இல்லாத விழாக்கள் தமிழகத்தில் காண முடியாது .கரகம் என்பது விதை பாதுகாப்பின் ஒரு அங்கமாகவும் இருந்து வந்திருக்கின்றது.


கரகத்தில் உள்ள விதைகளை இட்டு வைத்து வழிபட்டு அந்த விதைகளை முளைப்பாரி என அழைக்கப்படும் விதைத்தேர்வு முறைக்கு அனுப்பி வைக்கும் கலாச்சாரம் தொன்று தொட்டு இன்று வரை நீடித்து வருகிறது. தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்தி கரகம்" என்றும் தொழில் முறை கரகத்தை "ஆட்ட கரகம்" என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியில் கரகம் என்ற வார்த்தைக்கு   கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு நீர்கூடம் என்ற பல அர்த்தங்கள் உண்டு. இந்த கரகாட்டத்திற்கு நையாண்டி மேளம், சிறிய உடுக்கை ,பெரிய உடுக்கை, செண்டை , பறை போன்ற இசை கருவிகள் இசைக்கப்படுகின்றன. கரகாட்டம் பழங்காலத்தில் புகழ்பெற்று இருந்த குட க்கூத்து என்ற கலையின் வடிவமாக பார்க்கப்படுகிறது.


இத்தனை பெருமைமிகு தமிழ் நிலத்தில் பிறந்ததே பெருமை  வாய்ந்தது. அதைவிட பெருமை வாய்ந்தது தமிழ் நிலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.