தமிழ்நாட்டில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு.. 8 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை!

Manjula Devi
Jul 29, 2024,06:49 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று எட்டு மாவட்டங்களில் கன மழைக்கான எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பாசனத்திற்காக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.




இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று  கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக 55 சதவீதம் பெய்துள்ளது. அதாவது இந்த வருடம்(2024) ஜூன் 1 முதல் இன்று காலை வரை 115. 6 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை கூடுதலாக 179.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


இன்று கனமழை:


நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது  ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கான எல்லோ அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


மிக கனமழை:


அதேபோல் இன்று கேரளா மற்றும் கர்நாடகாவில்  மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.