தமிழ்நாடு ஓவர் ஓவர்.. பிரச்சாரத்துக்காக.. வெளி மாநிலங்களுக்குப் படையெடுக்கும் தலைவர்கள்!

Su.tha Arivalagan
Apr 22, 2024,06:41 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டதால் அண்டை மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். 


தமிழ்நாட்டில்  ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து விட்டது. ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அதே நாளில் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும், விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தலும் நடத்தப்பட்டது.


தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் முக்கியத் தலைவர்கள் பலரும் போட்டியிட்டுள்ளதால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக தலைமையில் முக்கிய அணிகளின் போட்டி நிலவுகிறது. இதுதவிர பாஜக தலைமையில் ஒரு அணி களம் கண்டுள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டதால், தற்போது தமிழ்நாட்டின்  அரசியல் தலைவர்கள் பிற மாநிலங்களில் நடைபெறும் தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்ய கிளம்பியுள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேரளாவுக்குப் போய் நேற்று அங்கு பிரச்சாரம் செய்தார். திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று ரோடு ஷோவையும் நடத்தினார். கேரளாவில் ஏப்ரல் 26ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.




இதைத் தொடர்ந்து இன்று அவர் பெங்களூரு போயுள்ளார். தெற்கு பெங்களூரு தொகுதியில் நடைபெற்ற ரோடுஷோவில் கலந்து கொண்ட அவர் அத்தொகுதியில் போட்டியிடும் சிட்டிங் பாஜக எம்.பியான தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துப் பிரச்சாரம் செய்தார்.


இதேபோல பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள சரத்குமார் குஜராத் மாநிலத்திற்குப் போய பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார். அங்குள்ள மணி நகர் தொகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியுள்ளார். குஜராத் மாநிலம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாகும்.


தனது குஜராத் மாநில பிரச்சாரம் குறித்து சரத்குமார் கூறுகையில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தின், அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள மணிநகரில் நேற்று, அகமதாபாத் மேற்கு தொகுதி வேட்பாளர் தினேஷ்பாய் மக்வானா, அகமதாபாத் கிழக்கு தொகுதி வேட்பாளர் ஹஸ்முக்பாய் படேல் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டேன்.




தேசத்தின் ஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை என்ற அடிப்படையில் மக்கள் பெருந்திரளாக ஆரவாரத்துடன் மோடிஜியின் தலைமையை ஏற்க வந்திருந்ததை கண்டேன். மோடிஜியின் பத்தாண்டு சாதனைகளாலும், தன்னலமற்ற தொண்டர்கள் மற்றும் காரியகர்த்தாக்களின் அயராத உழைப்பாலும் நரேந்திர மோடி அவர்கள் 3- வது முறையாக பாரத பிரதமராக வருவது உறுதி என்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.


இதேபோல கர்நாடகாவிலும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் பிரச்சாரம் செய்து தமிழர் வாழும் பகுதிகளில் பேசவுள்ளனர். கர்நாடகாவில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 26ம் தேதி அங்கு முதல் கட்ட தேர்தல்  நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் கேரளாவில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.