ரவுடிகளின் கனிவான கவனத்திற்கு.. முழங்கால்கள் பத்திரம்.. சுட்டுப் பிடிக்க ஆரம்பித்த போலீஸ்!

Su.tha Arivalagan
Aug 19, 2024,06:21 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் தற்போது ரவுடிகளுக்கு நேரம் சரியில்லை. போலீஸாரிடம் சிக்கி தப்பி ஓடுவதும், அவர்கள் சுட்டுப் பிடிப்பதுமாக தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன.


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க யார் முயன்றாலும் தக்க நேரத்தில் காவல்துறை அதிரடி காட்டத் தவறுவதில்லை. ஒரு அளவுக்குத்தான் புரோ பொறுமை என்று சொல்வர்கள் இல்லையா.. அதே மாதிரிதான். காவல்துறையும் சற்று விட்டுப் பிடிக்கிறது. அடங்காவிட்டால்  அடக்கும் வேலையில் காவல்துறை களம் குதித்து விடத் தவறுவதில்லை.


இந்த நிலையில் சமீப காலமாக ரவுடிகள் வேட்டையை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை ஒடுக்கவும், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் காவல்துறை நடவடிக்கைகள் இறுகியுள்ளன. இதனால் ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து செய்வோர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சற்று அலற ஆரம்பித்துள்ளனர்.


இந்த பின்னணியில்தான் சமீப காலமாக ரவுடிகளை போலீஸார் சுட்டுப் பிடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.




ஜூன் 28ம் தேதி  - மாமல்லபுரம்


கடந்த ஜூன் 28ம் தேதி மாமல்லபுரம் அருகே சத்யா என்ற ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டார். இவர் சீர்காழியைச் சேர்ந்தவர். தொழிலதிபரை மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பறிக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன. கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குள் உள்ளன. அதில் 5 கொலை வழக்குகள் ஆகும். மாமல்லபுரம் அருகே வைத்து இவரை மடக்கிப் பிடித்தபோது போலீஸாரை தாக்க முயன்றதாக கூறப்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.


ஆகஸ்ட் 14ம் தேதி - சென்னை


சென்னையைச் சேர்ந்தவர் ரோஹித் ராஜ். இவர் ஒரு பிரபல ரவுடி. ஷெனாய் நகரைச் சேர்ந்த இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 13 வழக்குகள் உள்ளன. தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ரோஹித் ராஜ், ஆகஸ்ட் 14ம் தேதி டிபி சத்திரம் பகுதியில் தலைமறைவாக இருந்ததாக தகவல் கிடைத்து போலீஸார் அங்கு விரைந்தனர். கல்லறைத் தோட்டப் பகுதியில் பதுங்கியிருந்த அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது 2 ஏட்டுக்களை வெட்டி விட்டு தப்பிக்க முயன்றார். இதையடுத்து போலீஸ் பார்ட்டியில் இடம் பெற்றிருந்த எஸ்ஐ கலைச்செல்வி, ரோஹித் ராஜின் முழங்காலில் சுட்டுப் பிடித்தார். 


ஆகஸ்ட் 17ம் தேதி சனிக்கிழமை - சிவகங்கை


சிவங்கை மாவட்டம் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலன் என்கிற சுள்ளான் அகிலன். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். 18க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாம். அதில் 5 கொலை வழக்குளும் அடக்கம். இவர் ஆகஸ்ட் 17ம் தேதி  காளையார் கோவில் அருகே காரில் வந்துள்ளார். காரை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டபோது, காரில் ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அகிலனை கைது செய்ய போலீஸார் முயன்றனர். அப்போது, குகன் என்ற எஸ்ஐயை அரிவாளால் வெட்டி தாக்க முயன்றார் அகிலன். இதையடுத்து ஆடிவேல் என்ற இன்ஸ்பெக்டர் அகிலன் காலில் சுட்டுள்ளார். காயமடைந்த அகிலன் மற்றும் எஸ்ஐ  குகன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


ஆகஸ்ட் 19ம் தேதி - கன்னியாகுமரி


கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் ரவுடி செல்வம். தூத்துக்குடியைச் சேர்ந்தவர்  இவர். இவர் மீது 6 கொலை வழக்கு உள்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கன்னியாகுரி மாவட்டம் தேரூர் பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்து போலீஸார் முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாரைத் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து அவரை இந்ஸ்பெக்டர் ஆதாம் அலி துப்பாக்கியால் சுட்டார்.  ரவுடி தாக்குதலில் காயமடைந்த காவலர் லிபின்பால் ராஜ் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


முன்பெல்லாம் போலீஸ் என்கவுன்டர், ரவுடி சுட்டுக் கொலை என்றுதான் செய்திகள் வரும். ரவுடிகளை சுட்டு உயிருடன் பிடிக்கும் செயல்கள் மிக மிக குறைவே. ஆனால் தற்போது ரவுடிகளை போலீஸார் சுட்டுப் பிடிக்க ஆரம்பித்திருப்பது அவர்களுக்கு காவல்துறை தரும் மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. திருந்தி விடுங்கள், அமைதியாகி விடுங்கள், ஆட்டம் தொடர்ந்தால், காட்டமான நடவடிக்கை பாயும் என்பதையே இது மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாக தெரிகிறது. ஆனாலும் திருந்தாத ரவுடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களும் அடங்கி, அமைதியானால் அவர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் ரொம்பவே நல்லது.


குடும்பத்தை நினைச்சுப் பாருங்க


ரவுடி அகிலன் சுட்டுப் பிடிக்கப்பட்டதும் அவரது சகோதரி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், எனக்கு அம்மா அப்பா கிடையாது. அண்ணன் மட்டும்தான். அவரை பிடிச்சுட்டுப் போயிட்டாங்க. என்கவுண்டரில் போடப் போவதாக சொல்கிறார்கள். அப்படி நடந்தால் நான் அனாதையாகி விடுவேன். பிறகு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு எனக்கு வழியில்லை என்று அவர் கூறியது மனதைப் பிசைவதாக இருந்தது.


பெரும்பாலான ரவுடிகளின் கதையை எடுத்துக் கொண்டால், அவர்களால் அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள் சார்ந்த குடும்பங்கள்தான். குறிப்பாக மனைவி, தாய், சகோதரி என அவர்கள் வீட்டுப் பெண்கள்தான் மிகப் பெரும் துயரத்தையும் சிக்கல்களையும் சந்திக்கின்றனர். ரவுடிகள் இறந்த பிறகு அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு போய் விடுகிறது. பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகி விடுகிறது. குழந்தைகள் மீது ரவுடி பிள்ளை என்ற முத்திரை விழுந்து விடுகிறது. அவர்களை வளர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.


ரவுடிகளாக இருப்போர் இதையெல்லாம் யோசிப்பதே இல்லை.. அந்த நேரத்து கெத்து, அந்த நேரத்து வீண் கவுரவம்.. இதெல்லாம்தான் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது.. அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சற்று குடும்பத்தை நினைத்துப் பார்த்தாலே போதும்.. நிச்சயம் திருந்துவார்கள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்