மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா?.. "எல்லாமே வதந்தி".. அண்ணாமலை பேட்டி!

Su.tha Arivalagan
Jan 27, 2023,10:39 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவார் என்று கடந்த ஒரு மாதமாக மக்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. எல்லாமே வதந்திதான்.. ஆனால் மக்களிடையே மோடி நம்மவர் என்ற எண்ணம் உருவாகி விட்டதையே இந்த பேச்சுக்கள் காட்டுகின்றன என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



ஏஎன்ஐக்கு அண்ணாமலை விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டு மக்கள் தங்களுடையவராக பார்க்கிறார்கள். அந்நியராக அவரைப் பார்க்கவில்லை. உண்மையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவார் என்று பேசி வருகிறார்கள். எங்கு போனாலும் இதே பேச்சுதான்.

2 நாட்களுக்கு முன்பு கூட நான் தூத்துக்குடியில் ஒரு டீக்கடைக்குப் போனபோது, சிலர் வந்து என்னிடம், அண்ணா மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா என்று கேட்டார். தமிழ்நாட்டில் இது பேசு பொருளாகியுள்ளது.  ராமநாதபுரத்தில் அவர் போட்டியிடுவார் என்று பேசுகிறார்கள். இது வதந்திதான்.. இந்த வதந்தியை மக்கள் தீவிரமாக பேசி வருகிறார்கள். அவர்கள் மோடி போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரை இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்தவர் என்று நினைக்கவில்லை. மாறாக, தங்களுடையவர் என்று கருதுகிறார்கள் என்பதே இதன் பொருளாகும்.

தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கும் முன்பு ஜாதி அடையாளம், தமிழ் அடையாளம் உள்பட பல்வேறு விஷயங்களைப் பார்த்து விட்டுத்தான் வாக்களிப்பார்கள்.  ஆனால் மோடி எல்லாவற்றையும் மாற்றியுள்ளார். இதை வேறு எந்த தேசியத் தலைவரும் இதுவரை செய்ததில்லை. எனவே 2024 லோக்சபா தேர்தல் மிகவு்ம் வித்தியாசமானதாக இருக்கும் என்றார் அண்ணாமலை.