"தமிழ்நாய்டு".. மத்திய அரசு இணையதளத்தில் தவறான பெயர்களால் சர்ச்சை!
Jan 28, 2023,09:22 AM IST
சென்னை: மத்தியஅரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயரை தமிழ் நாய்டு என்று எழுதியதால் சர்ச்சை வெடித்தது. பலரும் இதை சுட்டிக் காட்டிய பின்னர் அந்தத் தவறு சரி செய்யப்பட்டது.
mygov.in என்ற மத்திய அரசின் இணையதளத்தில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளில் எது உங்களை வெகுவாக கவர்ந்தது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதில் ஆப்ஷனாக அலங்கார ஊர்திகள் பங்கேற்ற மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்றை நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கலாம்.
அதில், அனைத்து மாநிலங்களின் பெயர்களும் சரியாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் கேரளாவின் பெயரை கேரெளா என்றும் தமிழ்நாட்டின் பெயரை தமிழ்நாய்டு என்றும் தவறாக எழுதியிருந்தனர். இது சர்ச்சையை கிளப்பியது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது. மத்தியஅரசின் மிக முக்கியமான இணையதளத்தில் இப்படி ஒரு தவறு நடக்கலாமா என்று பலரும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸம் இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது.