சென்னையில் விட்டு விட்டு வச்சு செய்யும் கனமழை .. 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Manjula Devi
Mar 11, 2025,05:18 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 8 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் தமிழ்நாடு முழுவதும் இருள் சூழ்ந்து மேகக் கூட்டங்கள் ஒன்று திரண்டு மழை வருவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழையுடன் தொடங்கி தற்போது விட்டு விட்டு மழை  பெய்து வருகிறது.


அதேபோல் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னையில் காலை முதல் இருள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அநேக இடங்களில்  பரவலாக மிதமான மழையும், சேப்பாக்கம், அண்ணா நகர், முகப்போர், மந்தவெளி, மயிலாப்பூர், எம் ஆர் சி நகர், அடையாறு உள்ளிட்ட  பகுதிகளில் கனமழையும்  பெய்து வருகிறது. 




இந்த நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி


இன்று மிக கனமழை: 


கன்னியாகுமரி,

திருநெல்வேலி,

தென்காசி,

தூத்துக்குடி , 

ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


இன்று கனமழை:


விருதுநகர், சிவகங்கை,

மயிலாடுதுறை, 

தஞ்சாவூர், திருவாரூர்,

நாகப்பட்டினம்,

புதுக்கோட்டை,

ராமநாதபுரம்,

ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ‌


சென்னை மழை:


சென்னையிலும் இன்று இடியுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளது.


நாளை கனமழை: 


கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.