"அங்கீகாரம்".. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிக்கு எப்ப நல்லது நடக்கும்?

Su.tha Arivalagan
Apr 29, 2023,09:14 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு கட்சிகள் குவிந்து கிடந்தாலும் கூட இதுவரை மொத்தமே 10 கட்சிகளே அங்கீகாரம் பெற்றுள்ளன. பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது அங்கீகாரத்தை இழந்து நிற்கின்றன.


கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி  ஆகியவற்றுக்கு இதுவரை மாநிலக் கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை  காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தேசியக் கட்சிகளாக உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் எவை என்று பார்த்தால் திமுக, அதிமுக, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேமுதிக ஆகியவை மட்டும்தான். 


தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளாக வலம் வரும் விடுதலைச் சிறுத்தைகள், பாமக, மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட  கட்சிகள் ஏற்கனவே மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்து விட்டன. அவை அங்கீகரிக்கப்படாத கட்சிகளாகவே கருதப்படும்.


ஒவ்வொரு கட்சிக்கும் சில நிபந்தனைகள் உண்டு.அதைப் பூர்த்தி செய்தால்தான் அவர்களுக்கு மாநிலக் கட்சி அல்லது தேசியக் கட்சி அங்கீகாரம் கிடைக்கும். சமீபத்தில் இவற்றைப் பூர்த்தி செய்த ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி  அந்தஸ்து கிடைத்தது. பூர்த்தி செய்யத் தவறிய தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், திரினாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேசியக் கட்சி அந்தஸ்து பறி போனது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் என்ன கொடுமை என்றால் சமீப ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களிடையே பேசு பொருளாகவும், தவிர்க்க முடியாத  அரசியல் சக்திகளாகவும் திகழ்ந்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு இன்னும் மாநிலக் கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை. அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் அங்கீகாரம் பெறாத கட்சியாகவே வலம் வந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  வரும் நாடாளுமன்றத் தேர்தலிலாவது இந்த இரு கட்சிகளும் அங்கீகாரம் பெரும் வகையில் "பெர்பார்மன்ஸ்" செய்வார்களா என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.