இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகள்.. தமிழ்நாடு சாதனை!

Su.tha Arivalagan
Apr 07, 2023,12:30 PM IST
சென்னை:   இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நாட்டிலேயே அதிக அளவிலான தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக கர்நாடகா விளங்குகிறது.

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதன்படி  2014ம் ஆண்டு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்து தற்போது 654 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கர்நாடகத்தில் அதிக அளவிலான தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.



அரசு மருத்துவக் கல்லூரிகள் 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 34 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. 2வது இடத்தில் 30 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் மகாராஷ்டிரா உள்ளது. மேற்கு வங்காளத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கர்நாடகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  குஜராத்திலும் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.  ராஜஸ்தானில் 21, மத்தியப் பிரதேசத்தில் 14, பீகாரில் 12 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரிகள்

கர்நாடகத்தில் 44 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாட்டிலேயே இங்குதான் அதிகஅளவிலான தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் தலா 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தெலங்கானாவில் 27, கேரளாவில் 21 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  மகாராஷ்டிராவில் 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

புதுச்சேரியில் 2 அரசு மருத்துவக் கல்லூரிகளே உள்ள நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.