பிறப்பு டூ  புகுந்த வீட்டுக்குப் போகும் வரை.. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எத்தனை எத்தனை திட்டங்கள்!

Su.tha Arivalagan
Sep 16, 2023,05:18 PM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: சமூக நீதியில் தமிழ்நாடு பிற மாநிலங்களை விட பலமடங்கு அதிக உயரத்தில் நிற்கிறது என்றால் இங்கு இதுவரை ஆட்சி செய்து வந்த கட்சிகளே காரணம் என்று தாராளமாக சொல்ல முடியும். இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைக் கொடுத்த மாநிலம் என்றால் அது நிச்சயம் தமிழ்நாடாகத்தான் இருக்க முடியும்.

குறிப்பாக  பெண்களுக்காக தமிழ்நாட்டில்தான் அரசுத் திட்டங்கள் எக்கச்சக்கம் உள்ளது. பெண்களுக்கு தமிழ்நாடு எப்போது தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுப்பதோடு, கூடவே ஊக்கப்படுத்தவும் தவறியதில்லை. அதில் எப்போதுமே தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னேறிய நிலையில்தான் இருக்கும்.



தமிழ்நாட்டில் பெண்களைப் பொறுத்தவரை, பிறந்தது முதல் திருமணமாகி புகுந்து வீட்டுக்குச் செல்லும் வரை அரசு சார்பில் பல்வேறு உதவிகளும் ஆதரவும் கொடுக்கப்படுகிறது. அதைப் பற்றிப் பார்ப்போமா.

பெண் குழந்தை பாதுகாப்பு சட்டம்:

1992 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வரால் பெண் குழந்தை பாதுகாப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலின வேறுபாடுகளை தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். 



இத்திட்டத்தின் கீழ்

திட்டம் 1: ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் அக்குழந்தையின் பெயரில் வைப்புத் தொகையாக ரூபாய் 50 ஆயிரம் சேமிப்பு செய்யப்படும்.

திட்டம் 2: ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து இருப்பின் இரு குழந்தைகளின் பெயரிலும் வைப்புத் தொகையாக தலா ரூபாய் 25 ஆயிரம் சேமிப்பு செய்யப்படும்.

திட்டம் ஒன்று மற்றும் திட்டம் இரண்டு ஆகியவற்றில் குழந்தையின் முதிர்வுத் தொகை, 18 வயது நிறைவடைந்த பின்னர் வட்டியுடன் குழந்தைக்கு வழங்கப்படும். இது பெண் குழந்தைகள் உயர் கல்வி தொடர உதவும்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்:

இத்திட்டம் தற்போது புதுமைப்பெண் திட்டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகறிது. இத்திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்விக்காக கல்லூரிகளில் சேர்ந்துள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும்  பட்டப்படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித் தொகை வழங்கப்படும்.

மகளிர் திருமண உதவி திட்டம்:

திருமணம் என்பது ஒரு கலாச்சார நிகழ்வாகும். பெற்றோர்கள் தங்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப திருமணம் நடத்துகின்றனர் . பெண்களின் வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையானது திருமணம்தான். தாய் வீட்டில் சுதந்திரமாக வாழும் பெண்கள், புகுந்த வீட்டுக்குப் போகும்போது ஒரு புதிய கலாச்சாரத்தை, வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர். அந்தக் குடும்பத்தின் மொத்த பாரமும் அப்பெண்ணின் மீது விழுகிறது.

இந்தத் திருமண வாழ்க்கை பல பெண்களுக்கு சிரமமானதாகவும் இருக்கிறது. காரணம், திருமணம் செய்யக் கூட வசதி இல்லாத குடும்பங்கள் பல உள்ளது. குறிப்பாக தாலி வாங்கக் கூட போராடும் குடும்பங்கள் ஏராளம்.திருமாங்கல்யத்தை வாங்க முடியாத ஏழைப் பெண்கள், ஆதரவற்றோர்கள்,கைம்பெண்களின் மகள், கலப்புத் திருமணம் செய்து கொள்வோர் என பலதரப்பட்ட மக்கள் இருக்கின்றனர். 

பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் திருமணத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர் .
இவர்களுக்கு உதவிடும் வகையில்தான்  திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டம் 1:  இத்திட்டத்தின்படி, மணமகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூபாய் 25,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் அரசு சார்பில் வழங்கப்படும்.

திட்டம்1: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்த பெண்களின் திருமணத்திற்கு ரூபாய் 50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

தற்போது பெண்களின் திருமண உதவித் திட்டத்தில் , டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறு மண உதவி திட்டம் , டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் மற்றும் அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் மூலமாக பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மகளிர் இலவசப் பேருந்து:



தமிழ்நாடு அரசு பெண்களுக்காக வழங்கும் முக்கியமான திட்டங்களில் ஒன்று இலவச பஸ் பயணம். பெண்கள் மற்றும் திருநங்கையர் இலவசமாக பஸ்களில் பயணம் செய்யக் கூடிய இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், அன்றாடம் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கும் பெண்களுக்கு இந்த இலவச பஸ் பயணச் சலுகை பெரும் உதவியாக இருக்கிறது.  மாதந்தோறும் குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை சேமிக்க இது உதவுகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம்:

பெண்களுக்கு கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கர்ப்ப காலத்தில் பெண்களுக்கான தேவையான நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கர்ப்பிணிகளுக்கு பேறுகால நிதி உதவியாக ரூபாய் 18000 தவணை முறையில் வழங்கப்படும். இது தவிர கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும் வழங்கப்படும். கருத்தரித்த உடனே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிய  வேண்டும். பின்னர் கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக அரசு மருத்துவமனையின் மூலம் பெற முடியும். 

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பரிசோதனைக்கு வரும் பெண்களுக்கு சத்தான உணவும் இலவசமாக வழங்கப்படும். குழந்தை பிறந்த பிறகு 11 வகையான சித்த மருத்துவ மூலிகை அடங்கிய மகப்பேறு சிகிச்சை பெட்டகம் வழங்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சுற்றுலா வளைகாப்பு விழாவில் பதினாறு பொருட்கள் அடங்கிய குழந்தை நலப் பெட்டகம் என எண்ணற்ற நன்மைகளை கர்ப்பிணி பெண்களுக்காக அரசு மேற்கொண்டு வருகிறது.



இது தவிர  கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக அரசு சேவை இல்லங்களில் உணவு, தங்கும் இடம், கல்வி மற்றும் தொழிற்கல்வி வழங்கப்படுகிறது. தற்போது பெண்களுக்கான இலவச பேருந்து வசதி மற்றும் மாதந்தோறும் மகளிருக்கு ரூபாய் ஆயிரம் நிதி உதவியும் தமிழகஅரசு வழங்கி வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்:

இந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் இணைந்துள்ளது. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படுவது இந்த புரட்சிகர திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
பெண்கள்தான் இந்த சமூகத்தான் ஆன்மாக்கள்.. அந்த ஆன்மாக்களை பத்திரமாக பாதுகாக்கும் திட்டங்களுடன் தமிழக அரசின் நடவடிக்கைகள் இருப்பது பாராட்டுக்குரியது. முன்பு ஆண்ட அரசுகளும், இப்போது ஆளும் அரசும் என அனைவரும் இணைந்து பெண்களின் நலனையும், வளத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.