Happy News Swiggy, Zomato workers: வந்தாச்சு.. இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு நலவாரியம்!

Meenakshi
Dec 27, 2023,04:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இணையம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து  தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.


ஊபர், ஓலா, சொமாட்டோ, ஸ்விக்கி போன்ற இணையம் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.


இது போன்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு, விபத்து காப்புறுதி, சுகாதார காப்புறுதி போன்றவை இல்லை. இந்த நிலையில் அமைப்பு சாராக் தொழிலாளர்களின் நலனுக்காக தனி நல வாரியம் அமைக்கப்படும் என சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து  ஊபர், ஓலா,டொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.




இந்தநிலையில், தமிழக இணையம் சார்ந்த  தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து இன்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இணைய செயலிகள் வாயிலாக இயங்கும் வாடகை, வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளிலும் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு என தனி நல வாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.




இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் "தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியம்" எனும் புதிய நலவாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.