வாஜ்பாயே காலில் விழுந்த சின்னப்பிள்ளைக்கு.. வீடு ஒதுக்கி உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: மத்திய அரசின் ஸ்தீரி சக்தி விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடடுள்ளார்.
மதுரை மாவட்டம் அழகர் கோயில் சாலையில் அப்பன் திருப்பதி அருகே உள்ளது பிள்ளைச்சேரி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தான் சின்னப்பிள்ளை. பேரு தான் சின்னப்பிள்ளை.. ஆனால் இவர் செய்த செயல் பெரிது. அதுவும் படிப்பறிவு இல்லாத இவர் செய்த செயலால் பல பெண்கள் பயடைந்தனர். களஞ்சியம் என்ற மகளிர் சுய உதவிக் குழு மூலம் கிராமப்புற பெண்களிடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி ஏழை எளிய பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த பெருமைக்குரியவர்.
தன்னைப் போன்ற ஏழை எளிய அடித்தட்டு பெண்களையும் சிறு சிறு குழுக்களாக இயங்க வலியுறுத்தி தொடர் பிரச்சாரம் செய்தவர் சின்னப்பிள்ளை. வறுமை, கந்துவட்டி கொடுமை உள்ளிட்டவற்றில் இருந்து மக்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டவர். ஆந்திரா, ஓடிஸா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் சென்று இது குறித்து பிரச்சாரம் செய்து ஏழை எளிய பெண்களை மீட்டவர்.
இந்த சாதனைக்காக கடந்த 2001ம் ஆண்டு இவருக்கு ஸ்ரீ சக்தி புரஸ்கார் மாதா ஜீஜாபாய் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வழங்கிய வாஜ்பாய் சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் காலில் விழுந்து வணங்கியதால் ஒட்டு மொத்த இந்தியாவும் இவரை திரும்பி பார்த்தது. அதன் பின்னர் பல விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
இத்தகைய சிறப்புடைய சின்ன பிள்ளைக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் வழங்கப்பட வில்லை என கண்ணீர் மல்க இவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும் ஏற்கனவே தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு சென்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாபட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் உடனடியாக வீடு கட்டவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த மாதமே வீடு கட்டும் பணியும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உதவிக்கு சின்னப்பிள்ளை நன்றி தெரிவித்துள்ளார்.