Happy Deepavali: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!

Meenakshi
Oct 25, 2023,04:17 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் தேதியிட்டு அகவிலைப்படி அளிக்கப்படும்.


தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 16 லட்சம்  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனால் பலன் அடைவர். 


2023-2024ம் ஆண்டிற்கான அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத  அகவிலைப்படி இனி 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 




இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு அறிக்கையில்,


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி 1.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில் அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.


முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.


அவ்வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழக அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். இதனால் ஆண்டு ஒன்றுக்கு ரூ 2546.16 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஓய்வூதியர்தாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.