தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Su.tha Arivalagan
Oct 18, 2024,08:36 PM IST

சென்னை:   தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 53 சதவீதமாக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தமிழ்நாடு அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கை:




நாட்டிற்கே வழிகாட்டு வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புடன் நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு  அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இந்த வகையில் மத்திய அரசு பணியாளர்களுக்கு 1.7.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படும் வகையில் முதலமைச்சர் அவர்கள் இதனை கணிவுடன் பரிசீலித்து 1.7.2024 முதல் மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.


இதனால் 50 சதவீதமாக உள்ள அவ்விலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 1.7.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வு ஊதியர்கள் பயன் பெறுவார்கள்.


இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ. 1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்