தமிழக அரசின் 2000வது கோவில் கும்பாபிஷேகம்... அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட செம தகவல்

Aadmika
Aug 28, 2024,06:48 PM IST

சென்னை : தமிழக அரசின் சார்பில் 2000 வது கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்பட உள்ளதாக தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தொன்மையான கோவில்கள் பலவும் புனரமைத்து, பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2000 வது கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்பட உள்ளது. 




2000வது கோவிலாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பரசலூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ஆகஸ்ட் 30ம் தேதி நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழகத்திங் உள்ள 65க்கும் அதிகமான கோவில்களில் ஒரே நாளில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டது. கோவில் திருப்பணிகள், தேர், குளங்கள் புனரமைப்பு, கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது. 


2021ம் ஆண்டு மே மாதம் முதல் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வரை கிட்டதட்ட 1856 கோவில்களில் திருபப்ணிகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் 9141 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவினரால் அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இவற்றில் பல கோவில்கள் 66 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும், பாலாலயம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் திருப்பணிகள் நிறைவடையாமல் இருக்கும் கோவில்கள் ஆகும்.பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற கோவில்களும் இதில் அடங்கும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்