தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா.. திமுக கூட்டணி புறக்கணிப்பு
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ஆளுநர் ரவி தலைமையில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக தலைவர்கள், திமுக கூட்டணிக் கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை. மாறாக பாஜக, அதிமுக தலைவர்கள் கலந்துகொண்டனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் கலந்து கொண்டனர். அதேபோல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் பங்கேற்றனர்.
கிண்டி ராஜ்பவனில் இன்று பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிராமத்து செட்டப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாட்டு வண்டிகள், கரும்பு , மண்பானை உள்ளிட்டவை பக்கா கிராமத்து உணர்வை கொடுத்தன. ஆளுநர் மாளிகையே குட்டிக் கிராமம் போல காட்சி அளித்தது. பல்துறைப் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். பொங்கல் வைப்புக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழா அழைப்பிதழில் தமிழகம் என்று குறிப்பிடப்பட்டதற்கும், தமிழ்நாடு அரசின் லச்சினை இல்லாமல் அழைப்பிதழ் இருந்ததற்கும் திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தமிழ்நாடு என்ற பெயரே இடம் பெற்றிருந்தது. எந்த இடத்திலும் தமிழகம் என்று இடம் பெறவில்லை. கடும் சர்ச்சையைத் தொடர்ந்து தமிழ்நாடு என்ற பெயரை இடம் பெறச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.