ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு சம்பவம்.. "நடந்தது இதுதான்".. வீடியோ வெளியிட்டது போலீஸ்!
சென்னை: ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற ரவுடி கருக்கா வினோத் உரிய நேரத்தில் போலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டான் என்று கூறியுள்ள காவல்துறை, இதுதொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு நீண்டதொரு விளக்கத்தை அளித்துள்ளது.
ஆளுநர் மாளிகையைத் தாக்க முயன்ற ரவுடி கருக்கா வினோத் தொடர்பாக ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளது. நியாயமான விசாரணை கொல்லப்படுவதாகவும் அது கண்டனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து இன்று சென்னையில் செய்தியாளர்களை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சய் குமார் ராத்தோர் ஆகியோர் அடங்கிய போலீஸ் டீம் சந்தித்து வீடியோ காட்சிகளுடன் விளக்கம் அளித்தனர்.
இந்த விளக்கத்தின்போது காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ரவுடி கருக்கா வினோத் தனியாகவே இந்த செயலில் ஈடுபட்டான். அவன் மட்டுமே இந்த காரியத்தை செய்துள்ளான். நந்தனம் சிக்னலிலிருந்து அவன் ஆளுநர் மாளிகை வரை நடந்தே வந்தான். வரும்போது பையில் பாட்டில்களைக் கொண்டு வந்த அவன், சைதாப்பேட்டை கோர்ட் பகுதியில் வந்த பிறகு அதில் பெட்ரோலை நிரப்பி தனது உடைக்குள் மறைத்துக் கொண்டு வந்துள்ளான்.
ஆளுநர் மாளிகை நுழைவாயில் எதிர்புறம் உள்ள பகுதியிலிருந்துதான், அதாவது கிட்டத்தட்ட 30 மீட்டர் தொலைவிலிருந்துதான் அவன் பெட்ரோல் குண்டை எறிய முயன்றான். அதைப் பார்த்த ஆளுநர் மாளிகை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் உடனடியாக அதைத் தடுத்து மடக்கிப் பிடித்தனர். தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிகரமாக ஈடுபட்டு ரவுடியை மடக்கிப் பிடித்தனர் போலீஸார்.
சம்பவத்தில் ஈடுபட்டது கருக்கா வினோத் மட்டுமே. வேறு யாரும் இதில் ஈடுபடவில்லை. அவனையும் கூட போலீஸார் உடனடியாக மடக்கிப் பிடித்து விட்டனர். ஆளுநர் மாளிகை கூறியது போல பலர் இதில் ஈடுபடவில்லை. ஆளுநர் மாளிகை ஊழியர்களும் வினோத்தைப் பிடிக்கவில்லை, பிடித்தது போலீஸார்தான்.
ரவுடி கருக்கா வினோத்தின் செயலில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அவனை காவலில் எடுக்கவுள்ளோம். எடுத்து விசாரிக்கும்போது மற்ற விவரங்கள் தெரிய வரும். கருக்கா வினோத்துக்கும், பிஎப்ஐ அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விசாரணையின்போது கருக்கா வினோத்துக்கு யாருடன் தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும்.
மயிலாடுதுறை சம்பவம் குறித்தும் விளக்கம்
ஆளுநர் ஆர். என். ரவி மயிலாடுதுறைக்கு தருமபுரம் ஆதீன மட விழாவில் கலந்து கொள்ளச் செல்லும்போது கற்கலாலும், தடியாலும் தாக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டிருந்தது. மேலும் இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதியவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதையும் மறுத்து காவல்துறை சார்பில் விரிவான விளக்கம் தரப்பட்டது. புகார் பதியப்பட்ட ஆதாரத்தையும் போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் வெளியிட்டனர்.
ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்பட்ட புகார்களுக்குப் பதிலளித்துள்ள காவல்துறையின் இந்த விளக்கத்துக்கு ஆளுநர் மாளிகை தரப்பு என்ன மாதிரி ரியாக்ஷன் காட்டும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.