மன்னிப்பு கேட்காவிட்டால்.. லட்சக்கணக்கானோரை திரட்டிப் போராட்டம்.. குஷ்புவுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

Su.tha Arivalagan
Nov 23, 2023,02:39 PM IST

சென்னை: சேரி மொழி என்று கூறி பட்டியல் இன மக்களை இழிவுபடுத்தியதற்காக நடிகை குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி துறை தலைவர் எம். பி. ரஞ்சன் குமார் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:


கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து அவருடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் அநாகரிகமான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தேசிய மகளிர் ஆணையமும் தனது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் எக்ஸ் வலைதள பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்பூவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பூ திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியை பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும் மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.


சேரி மொழி என்று பேசி பட்டியல் இன மக்களை நேரடியாக குஷ்பூ அவமதித்துள்ளார். நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்ட போது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார். பாஜகவின் கே.டி ராகவன் என்ற தலைவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசியபோது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார். பாஜகவில் மகளிர் நிர்வாகிகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளான போது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார். மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்.




குஷ்புவுக்கு மகளிர் நலன் மீது எல்லாம் சிறிதளவும் அக்கறை கிடையாது. தன் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே குஷ்புவின் நோக்கம் ஆகும். சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும் போது மட்டும் இனித்ததா. மக்களிடம் இருந்து பலத்தை எதிர்ப்பு எழுந்த பிறகும் கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் பூசி மெழுகும் வேலையை செய்ய தொடங்கி இருக்கிறார். சேரி என்ற வார்த்தைக்கு பிரஞ்சு மொழியில் அன்பு என்று அர்த்தமாம். அதைத்தான் பயன்படுத்தினாராம். திமுக ஆதரவாளர் ஒருவரின் எக்ஸ் பதிவுக்கு பதில் அளித்த குஷ்பூ சேரி மொழி என்று அப்பட்டமாக திட்டினார். அதோடு முதல்வரைச் சுற்றி இது போன்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இதுதான் அன்பை வெளிப்படுத்தும் செயலா.


யாரை ஏமாற்ற குஷ்பூ கபட நாடகமாடுகிறார். இப்போது கூட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை. சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்பூவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது. குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டு போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்த பதிவை உடனடியாக குஷ்பூ நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலில் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.


மன்சூர் அலிகான் பேச்சால் ஏகப்பட்ட பஞ்சாயத்தாகி வருகிறது. மன்சூர் அலிகான் தவறான வார்த்தையை விட்டு சிக்கினார்.. இப்போது அவரைக்  கண்டிக்கப் போய் குஷ்பு வார்த்தையை விட்டு அவரும் சிக்கலில் மாட்டியுள்ளார். பொது வெளியில் பேசும்போது நா காக்க வேண்டும் என்ற முது மொழியை எல்லோரும் அவ்வப்போது மறந்து விடுவதால் வரும் வினை இது.


குஷ்பு பதிலடி


இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு குஷ்பு பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தற்போது போட்டுள்ள டிவீட்டில், காங்கிரஸ் கட்சியினர் திடீரென விழித்தெழுந்து வந்திருப்பதைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.  உங்களையும், உங்க மிரட்டலையும் நிறையப் பார்த்தாச்சு. உங்களால் உங்க குடையைக் கூட சுதந்திரமாக பிடிக்க முடியாது என்று கிண்டலடித்துள்ளார் குஷ்பு.