தமிழ்நாட்டில்.. குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம்.. முதல்வர் மு. க ஸ்டாலின்

Manjula Devi
Mar 12, 2024,07:30 PM IST

சென்னை: பா.ஜ.க. அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்த முடியாது என முதல்வர் மு.க ஸ்டாலின் திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், நேற்று குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது.


இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:




நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் பாஜக அரசு இருந்து வரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசரகதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல. 


பல வகையான மொழி, இன, மத மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நலனுக்கும்,  இந்திய தாய் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும், முற்றிலும் எதிரானதாகும். அது மட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம் வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானது தான் இந்த சட்டம்.


இதன் காரணமாக தான் கழக அரசு அமைந்தவுடனேயே அதாவது கடந்த 8.9. 2021 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி இச்சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.


இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன் தேர்தல் அரசியலுக்காக இந்த சட்டத்தை தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டி இருக்கிறது.


இந்திய மக்களிடையே பேதங்களை தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச்சட்டத்தால் எவ்விதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்த சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன் ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே மத்திய அரசு நிறைவேற்றி இருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது. இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.