இசையமைப்பாளர் சங்கத் தலைவர் பதவி.. "விட்டுக் கொடு தீனா".. இளையராஜா அட்வைஸ்!
- மஞ்சுளா தேவி
சென்னை : இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை இளைய தலைமுறையினருக்கு விட்டுக் கொடுக்குமாறு, தற்போதைய தலைவர் தீனாவுக்கு, இசைஞானி இளையராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தீனா இருந்து வருகிறார். இந்த சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு பிறர் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சங்க நிர்வாகிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் தீனாவுக்கு, இசைஞானி இளையராஜா ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இளையராஜா கூறியிருப்பதாவது:
தீனா அன்றே உங்களை எதிர்பார்த்தேன். நீங்கள் வருகிறதாக சொன்னீர்கள். இந்த யூனியனை ஆரம்பித்தது எம்பி சீனிவாசன். முதல் முதலாக திரைத்துறையில் ஒரு யூனியன் வந்தது என்றால் அது சினி மியூசிசியன் யூனியன் தான். இதை ஆல் இந்தியா லெவல்ல ஆரம்பித்திருந்தார்கள். இதுல சில விதிமுறைகளும் ஏற்படுத்தி இருந்தாங்க. இரண்டு வருடம் தான் பிரசிடெண்ட் ஆக இருக்கணும் என்று சொல்லி இருக்காங்க.
அதனால இப்ப இருக்கக் கூடிய மெம்பர்கள் வந்து, நீ இரண்டு முறை பதவியில இருந்து விட்டாய் மூன்றாவது முறையாக அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா.. என்று கேட்கிறார்கள். சில முறைகேடான விஷயங்கள் நடந்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் இந்த விஷயத்திற்குள் போக விரும்பவில்லை தீனா. ஆனால் யூனியன்ல இருக்கின்ற மெம்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு தலைவனா இருக்கிற நீ அதை ஏற்றுக் கொள்வது தான் நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.
அதனால் தான் உனக்கு நான் நேரடியாக செய்தி அனுப்புகிறேன். நீ நல்லது செய்கிறாய். நல்லபடியாக நடத்துற என்பது வேறு விஷயம். ஆனால் நீ இரண்டு முறை யூனியன் பிரசிடெண்ட்டா இருந்துட்ட என்ற மனநிறைவு வேண்டும். அவர்களுக்கு நீ விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.