சபரிமலை சீசன்.. தமிழ்நாடு அரசு பேருந்துகள்.. பம்பை வரை செல்ல கேரள அரசு அனுமதி

Meenakshi
Nov 08, 2024,05:00 PM IST

சென்னை: அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, நிலக்கல்லுக்குப் பதிலாக பம்பையில்  இருந்தே  தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.


சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல மற்றும் மகர விளக்கிற்காக வருகிற 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது. அதன்படி மண்டல பூஜை டிசம்பர் 26ம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதியும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு தற்போது செய்து வருகிறது.




இந்நிலையில், மண்டல பூஜை முதல் மகர ஜோதி வரை தமிழக பஸ்கள் பம்பை வரை இயக்கப்படும் என்று தமிழ அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பார்க்கிங் பிரச்சனை எழாத வகையில், 2 தமிழ்நாடு பஸ்களை அங்கேயே நிறுத்தி வைக்க கேரள போக்குவரத்துத்துறை தேவஸ்தானத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக எஸ்.இ.டி.சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


கேரள அரசின் அனுமதியால் தமிழக பக்தர்கள் 20 கி.மீ வரை கேரள பேருந்துகளில் அலைய வேண்டிய நிலை இனி இருக்காது. மண்டல பூஜை, மகர ஜோதியை முன்னிட்டு நவ.,15 முதல் ஜன.,16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


மேலும்,  சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. சபரி மலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிசம்பர் 27 முதல் டிசம்பர்  30ம் தேதி வரை நடை சாத்தப்படுவதால், டிசம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 29ம் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்