பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்டிராங் வெட்டிப் படுகொலை.. 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

Su.tha Arivalagan
Jul 05, 2024,10:27 PM IST

சென்னை: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான ஆம்ஸ்டிராங் இன்று இரவு சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். வழக்கறிஞரான ஆம்ஸ்டிராங்கின் படுகொலை சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்து வந்தவர்  ஆம்ஸ்டிராங். தலித் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனவர். ஆரம்பத்தில் பல்வேறு கட்சிகளில் செயல்பட்ட அவர் பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.


விளிம்பு நிலை மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர். குறிப்பாக தலித் சமுதாய மக்கள் படிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் ஆம்ஸ்டிராங். அவருக்கு பல்வேறு கொலை மிரட்டல்களும் இருந்து வந்தன. இருப்பினும் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.




இந்த நிலையில் இன்று இரவு பெரம்பூர் பகுதியில் தனது வீட்டின் அருகே அவர் கட்சியினரோடு நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 டூவீலர்களில் 6 பேர்  அவர்கள் அருகே வந்தனர். அனைவரும் சொமோட்டா நிறுவன டூவிலரில் வந்திருந்தனர். பின்னர்  நிதானமாக இறங்கிய அந்தக் கும்பல்  திடீரென ஆம்ஸ்டிராங்கை அரிவாள், கத்திகளால் சரமாரியாக வெட்டித் தள்ளியது. கொடூரமாக நடந்த இந்தத் தாக்குதலால் நிலை குலைந்த ஆம்ஸ்டிராங் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.


கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ஆம்ஸ்டிராங் கட்சியினர் சுதாரிப்பதற்குள் கொலையாளிகள் தப்பி ஓடி விட்டனர். உடனடியாக ஆம்ஸ்டிராங்கை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக அங்கு டாக்டர்கள் தெரிவித்தனர்.


திட்டமிட்ட படுகொலை?




ஆம்ஸ்டிராங் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட செயல் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மிகவும்தெளிவாக திட்டமிட்டு இந்தக் கொலை நடந்திருப்பதாக தெரிகிறது. 


2000மாவது ஆண்டு அரசியலுக்கு வந்தவர் ஆம்ஸ்டிராங். ஆரம்பத்தில் சுயேச்சையாக இவர்  போட்டியிட்டு சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக பதவி வகித்தார். பின்னர் 2007ல் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக உயர்ந்தார். 2011 சட்டசபைத் தேர்தலில் கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். 


தமிழ்நாட்டின் முக்கியமான தலித் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆம்ஸ்டிராங் என்பதால் அவரது கொலை பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகர் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.