சபாஷ் சரத்குமார்.. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு.. பாராட்டும் அண்ணாமலை

Su.tha Arivalagan
Mar 12, 2024,07:30 PM IST

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைக்கும் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


சரத்குமார் இன்று தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து விட்டார். நேற்று நள்ளிரவில் இந்த யோசனை தோன்றியது. வெறும் சீட்டுக்காக கூட்டணியா என்று யோசித்தபோது மக்கள் சேவை செய்வதுதானே சரியானதாக இருக்க முடியும் என்று எண்ணி இந்த முடிவை எடுத்தேன். எனது மனைவியை எழுப்பி இதைச் சொன்னபோது உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதைச் செய்யுங்க. நான் கூடவே இருப்பேன் என்று அவர் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதையடுத்து உடனடியாக அண்ணாமலையை தொலைபேசியில் அழைத்துத் தகவலைச் சொன்னேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.




இந்த நிலையில், சரத்குமாரின் இந்த முடிவுக்கு அண்ணாமலை பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமைத்துவதத்தால் ஈர்க்கப்பட்ட சிறந்த தேசியவாதியான சரத்குமார் இன்று,  தமிழ்நாடு பாஜக தலைவர்கள்பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் முன்னிலையில் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 


தனது கலைத்திறன் மூலம் தேசிய உணர்வுக்கு குரல் கொடுத்த சரத்குமார், தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.  தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நேரத்தில், சரத்குமார் எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும்.


தமிழ்நாடு பாஜக  சார்பில், பாஜக குடும்பத்திற்கு  சரத்குமார் அவர்களை மனதார வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.