பொய் சொல்லத் தெரியாத நேர்மையாளர்.. நேர்பட பேசக் கூடியவர்.. ஜிகே வாசனை புகழ்ந்த அண்ணாமலை

Meenakshi
Feb 26, 2024,06:47 PM IST

சென்னை: பொய் சொல்லத் தெரியாத நேர்மையான நேர்பட பேசக்கூடியவர் என்று தமாகா தலைவர் ஜி கே வாசனை புகழ்ந்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.


பாஜக கூட்டணியில் முதலில் இடம் பெற்றுள்ள கட்சியாக தமாகா உருவெடுத்துள்ளது. இக்கட்சிக்கு எத்தனை சீட்டை பாஜக ஒதுக்கும் என்று தெரியவில்லை.பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்கும்  போது மத்திய அமைச்சர் பதவியும் வாசனுக்குக் கிடைக்கக் கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிற இந்தநிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசனை சந்தித்து வாழ்த்தினார். 




பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை கூறுகையில், இந்த அற்புதமான சரித்திரம் திரும்பி பார்க்க கூடிய நிகழ்வு இன்று நடந்திருக்கிறது. எங்களை வழி நடத்தக்கூடிய நபராக ஜி கே வாசன் இருக்கப் போகிறார். பாஜக கூட்டணிக்கு முதல் ஆளாக வந்திருக்கிறார்கள். தமாகா தலைவர் ஐயா ஜி கே வாசனிடம் நான் எப்போதும் அரசியல் ஆலோசனை பெறுவது உண்டு. வாசன் அய்யாவின் ஆலோசனையின் பேரில் அடுத்த 100 நாட்கள் தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் களத்தைப் பார்ப்பீர்கள்.


பெரிய மாற்றத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. மூப்பனாா் ஐயா கண்ட கனவிற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2026 தேர்தல்களில் இதன் தாக்கம் தெரியும். த.மா.கா.வுக்கு தனிப்பெருமைகள் உள்ளது. ஜி கே வாசன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். எல்லா தலைவர்களையும் சந்தித்து பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஐயா அவர்களுக்கு தெரியும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஒரு வலிமையான கூட்டணி ஒரு வளமான தமிழகத்தை உறுதியான பாரதத்தை உருவாக்க ஒரு கூட்டணி தேவைப்படுகிறது. ஐயா அவர்கள் முன்னோடியாக முதல் காலை பதித்து இருக்கிறார்.


நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தை பெற்றவர். பொய் சொல்லத் தெரியாத நேர்மையான நேர்பட பேசக்கூடியவர். ஜி கே வாசன் ஐயாவின் ஆதரவுடன் வளமான கூட்டணியை தமிழ்நாட்டில் உருவாக்குவோம். பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நண்பராக இருப்பவர் ஜி கே வாசன். பிரதமருக்கு நேரடியாக போன் செய்து பேசக்கூடியவர். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அண்ணன் தம்பிகளாக ஜாதி மதம் கடந்து மோடி அவர்கள் மீண்டும் பாரதப் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக பாடுபடுவோம் என்றார் அண்ணாமலை.