"102 கே பஸ்".. கண்ணகி நகர் மாணவிகள் படும் கஷ்டம்..  பள்ளியை மாற்றக் கூடாதா.. பாஜக கோரிக்கை!

Su.tha Arivalagan
Feb 14, 2023,02:46 PM IST

சென்னை: சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த மாணவிகள் படும் அவஸ்தையைப் போக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி தனது டிவீட்டில் கூறியுள்ளதாவது:


'102 கே' என்ற எண் கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக இயக்கப்படும் பேருந்து ஒன்று தினமும் காலை சுமார் 7,15 மணிக்கு கண்ணகி நகரில் இருந்து கிளம்பி 8.15 மணியளவில் சாந்தோம் வரை  செல்வதை காண நேர்ந்தது. சாந்தோமில் அரசு உதவி பெறும்  தனியார் பள்ளி ஒன்றின் மாணவிகள் சுமார் 50 பேர்

இதில் பயணிக்கின்றனர்.


பல வருடங்களுக்கு முன் சாந்தோமில் கடற்கரையோரம் இருந்தவர்களுக்கு கண்ணகி நகரில் வீடுகள் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த பேருந்து சேவை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலில், காலையில் ஒருமணி நேரம் பயணம் செய்யும் மாணவிகள் மாலையில் கண்ணகி நகர் சென்றடைவதற்கு ஒன்றரை மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கூட ஆகும்.


போக்குவரத்து துறையின் பேருந்து சேவையை நாம் பாராட்டுகிற அதே வேளையில், இந்த மாணவிகள் கண்ணகி நகருக்கு அருகிலேயே படிக்க அரசு ஆவன செய்ய முடியாதா? தினமும் மூன்று மணி நேரம் பேருந்திலேயே பயணித்தால் படிப்பது எப்போது, விளையாடுவது எப்போது?  


கண்ணகி நகர் அருகே பள்ளிகளே இல்லையா? இந்த மாணவிகள் படும் துயரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக கண்ணகி நகர் அருகே உள்ள அரசு பள்ளிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ தங்கள் கல்வியை தொடர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மாநில  கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு டேக் செய்து கோரிக்கை விடுத்துள்ளார்.


இது நல்ல யோசனைதான். அரசு கவனிக்குமா!