TamilNadu Vote share: அண்ணாமலை தோற்றிருக்கலாம்.. ஆனால் பாஜகவுக்கு நல்லது நடந்திருக்கு!

Su.tha Arivalagan
Jun 05, 2024,05:31 PM IST

சென்னை: தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவியுள்ள போதிலும், அதன் தலைவர் அண்ணாமலையே தோற்றாலும் கூட, அக்கட்சிக்கு ஒரு பெரிய பூஸ்ட் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலை விட பல மடங்கு வாக்கு சதவீதத்தை அது அதிகரித்துள்ளது. இதில் முக்கியமானது, திமுக அல்லது அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுடன் இணையாமல் அது இந்த வாக்கு சதவீதத்தை சாதித்துள்ளது. 


2019 லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய கூட்டணியில் பாஜகவும் இணைந்திருந்தது. அதிமுக, பாமக, தேமுதிக, புதியநீதிக் கட்சி என பல கட்சிகள் இணைந்திருந்த அந்த வானவில் கூட்டணியில் பாஜகவுக்கு பெரிய ஸ்கோப் இருந்தது. ஆனால் போட்டியிட்ட அனைத்து இடத்திலும் பாஜகவுக்கு தோல்வியே கிடைத்தது. அந்தத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்த வாக்குகள் 3.58 சதவீதம்தான்.


அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்




இந்தத் தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இணையவில்லை, இணையவும் அண்ணாமலை விரும்பவில்லை. நம்மிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. அனைத்துத் தொகுதிகளிலும் தோற்றாலும் பரவாயில்லை. தனியாக நிற்போம், நம்முடன் வரும் கட்சிகளை நமது தலைமையில் திரட்டுவோம்.. நமது பலத்தை பரீட்சித்துப் பார்த்து விடுவோம். அதுதான் 2026 சட்டசபைத் தேர்தலில் நாம் வென்று தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க உதவும் என்பது அண்ணாமலை திட்டம்.


இதனால்தான் வேண்டும் என்றே அவர் அதிமுகவை சீண்டினார், தானாக முன்வந்து அதிமுகவே பாஜக வேண்டாம் என்று சொல்ல வைத்தார். இதெல்லாம் நடந்தைத் தொடர்ந்து படு புத்திசாலித்தனமாக வாக்கு சதவீத பலத்துடன் கூடிய பாமகவை தன் பக்கம் இழுத்தார். பாமக கேட்ட தொகுதிகளைக் கொடுத்தார்.. இன்ன பிற உதவிகளும் கூட போனதாக கூறப்படுகிறது. கூட்டணியை வலுவாக்கிய பின்னர் முக்கியத் தலைவர்களையும் களத்தில் இறக்க திட்டமிட்டு டாக்டர் தமிழிசை, எல். முருகன் உள்ளிட்டோர் களம் இறக்கப்பட்டனர்.


வேட்பாளர்கள் தேர்வில் சாதுரியம்




மூத்த தலைவர்களை வேட்பாளர்களாக்கியது ஒரு மிகப் பெரிய சாதுரியமான திட்டம். அது உண்மையில் பாஜகவுக்குக் கை கொடுத்துள்ளது. காரணம், பெரிய தலைவர்கள் நின்றால் வாக்குகள் அதிகம் கிடைக்கும், அவர்களது முகத்திற்காக வாக்குகள் நிறைய வரும் என்பது திட்டம். அதன்படியே அதிக அளவிலான வாக்குகளை இந்தத் தேர்தலில் பாஜக பெற்று அசத்தியுள்ளது.


2024 தேர்தலில் 23 தொகுதிகளில் பாஜக தமிழ்நாட்டில் போட்டியிட்டது. புதுச்சேரியில் பாஜக சார்பில் வலுவான நமச்சிவாயம் நிறுத்தப்பட்டார். புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. ஆனால் அது பெற்ற வாக்கு சதவீதம் ஆச்சரியப்பட வைக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 11.24 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தமாக 18.2 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது கடந்த 2014 தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட சற்று குறைவுதான். அப்போது 18.5 சதவீத வாக்குகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றிருந்தது.


பாஜகவுக்கு நடந்த நல்லது




இந்தத் தேர்தலில் பாஜக சில சாதனைகளைப் படைத்துள்ளது. அதை லிஸ்ட் போட்டுப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.


- திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் இல்லாமல் அமைத்த கூட்டணிக்குத் தலைமை தாங்கிய பாஜக அதில் 11 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பது முதல் சாதனை.


- அண்ணாமலை போட்டியிட்ட கோயம்புத்தூர் உள்பட 10 தொகுதிகளில் இந்தத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி விட்டு 2வது இடத்தைப் பிடித்துள்ளது பாஜக. இந்தத் தொகுதிகளில் அதிமுகவுக்கு 3வது இடமே கிடைத்தது. 


அண்ணாமலை தேர்தலுக்கு முன்பு பல சவால்களை விட்டிருந்தார். 25 சதவீத வாக்குகளைப் பெறுவோம், தென் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளே இருக்காது, வடக்கு தெற்கு பாகுபாடு அழியும் இப்படி பல விஷயங்களை அவர் சொல்லியிருந்தார்.  அது எதுவும் நடக்கவில்லை. ஆனால் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய சில விஷயங்கள் நடந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. 


இதைக் கட்டிக் காப்பது கஷ்டம்




ஆனால் இங்கு ஒரு விஷயத்தை நாம் யோசித்தாக வேண்டும்.. தேசிய அளவில் பாஜக மீண்டும் எழுச்சியுடன் 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்தான் பாஜகவுக்கு வாக்களித்தவர்கள் ஆர்வத்துடன் அவர்களுக்கு ஓட்டுப் போட்டிருப்பார்கள். ஆனால் தற்போது தேசிய அளவில் பாஜகவின் பலம் குறைந்து விட்டது. சறுக்கலை அது சந்தித்துள்ளது. வரும் நாட்களில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியாது. காரணம், உத்தரப் பிரதேச வாக்காளர்களின் மிகப் பெரிய மன மாற்றம். அது வரும் நாட்களில் மேலும் ஆழமானால், பாஜக அடுத்த தேர்தலை மிகப் பெரிய சவாலுடன்தான் சந்திக்க வேண்டி வரும். அப்போது தமிழ்நாட்டிலும், பாஜக ஆதரவு வாக்குகளில் மாற்றம் வர வாய்ப்புண்டு.


இன்னொரு விஷயத்தையும் பார்த்தாக வேண்டும்.. தற்போது நடந்தது மக்களவைத் தேர்தல். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீதும், திமுக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால் ஈர்க்கப்பட்டும் மக்கள் பெருவாரியான வாக்குகளை திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் கொடுத்துள்ளனர். வரும் நாட்களில் திமுக அரசு மேலும் பல திட்டங்களை களம் இறக்கவுள்ளது. 


திமுகவை சமாளிக்க பிரயத்தனம் தேவை




திமுக அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ள மகளிர் இலவச பேருந்து திட்டம், பெண்கள் உரிமைத் தொகை ஆகியவை மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன (எதிர்க்கட்சிகள் அதை ஏற்க மறுத்தாலும், அதுதான் உண்மை).. இந்தத் திட்டத்தில் மேலும் பயனாளிகள் இணையும்போது இந்தத் திட்டம் இன்னும் பெரிய வெற்றியைப் பெறும். இது வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு பெரிய அளவில் கை கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.


எனவே தற்போது பாஜகவுக்குக் கிடைத்துள்ள வாக்கு சதவீதம் மட்டும் அந்தக் கட்சி, அடுத்த சட்டசபைத் தேர்தலில் சாதிக்க போதாது. மாறாக, மத்தியிலிருந்து மாநிலத்திற்குத் தேவையான திட்டங்கள், உதவிகளை வாங்கித் தந்தாக வேண்டும். வெள்ளப் பாதிப்பில் மத்திய அரசு தமிழ்நாட்டை பாராமுகமாக பார்த்தது மக்களை கடுமையாக பாதித்து விட்டது. கொடுக்காவிட்டாலும் கூட பரவாயில்லை, பல பாஜக தலைவர்கள் பேசிய விதம், அவர்கள் இதுகுறித்து தெரிவித்த கருத்துக்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை - அதை தமிழ்நாடு பாஜகவும் மறந்து விடக் கூடாது. எனவே இப்போது கிடைத்துள்ள பலம் நிச்சயம் மிகப் பெரிய விஷயம்தான், ஆனால் இதை மேலும் பலமாக்க வேண்டும் என்றால், இது சிதைந்து விடாமல் காக்க வேண்டும் என்றால் மத்தியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நிறைய நல்லது நடக்க வேண்டும். அப்படி நடந்தால் 2026 தேர்தலில் திமுகவுக்கு பாஜக பெரும் சவாலாக மாற வாய்ப்புண்டு.


இப்போது பாஜகவுக்குக் கிடைத்துள்ள இந்த வாக்கு சதவீதம் நிச்சயம் திமுகவின் கண்களையும் உறுத்தும். திமுகவும் சும்மா இருக்காது.. இதை முறியடிக்க அதுவும் திட்டமிடும். தேர்தல் கணக்குகளிலும், வாக்குகளைக் கவரும் வேலையிலும் திமுக மிகப் பெரிய கில்லாடி.. செந்தில் பாலாஜி இல்லாத குறையை அது தற்போது உணர்ந்திருக்கும். எனவே அடுத்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் செந்தில் பாலாஜியும் களம் இறங்கி விட்டால், பாஜகவின் கணக்குகள் தப்பாகப் போகவே நிறைய வாய்ப்புகள் உண்டு. எனவே இது எப்படிப் போகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.