தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: உயிர்ம உழவர்களுக்கு நம்மாழ்வார் விருது அறிவிப்பு!

Meenakshi
Mar 15, 2025,05:55 PM IST

சென்னை: சிறந்த உயிர்ம உழவர்களுக்கான நம்மாழ்வார் விருது வழங்கும் திட்டம், 2025-26 ஆம் ஆண்டிலும் 3 உழவர்களுக்கு பாராட்டுப் பத்திரத்துடன் தலா ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


2025-26 நிதியாண்டில் வேளாண் துறைக்கு  மட்டும் மொத்தமாக ரூ.45,661.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025-26ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். 1 மணி 41 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


அப்போது, நல்லூர் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக இந்த 5 விளைபொருளுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.


உழவர் சந்தை மேம்படுத்துதல்:




உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டுக்கு எடுத்துச் சென்று வழங்கிட உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும். ரூ.8 கோடியில் தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். முந்திரியின் பரப்பு, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் சாகுபடியை மேற்கொள்ள ரூ.11.74 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.1 கோடியில் உதிரிவகை ரோஜா மலர்களின் சாகுபடிக்கு 500 ஏக்கரில் மேற்கொள்ள நறுணை ரோஜாவுக்கான சிறப்புத்திட்டம் உருவாக்கப்படும்.



 வெங்காய சேமிப்புக்கூடங்கள்:


வெங்காயத்தின் விளைச்சல் குறையும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்திடும் பொருட்டு வெங்காய சேமிப்புக்கூடங்கள் ரூ.18 கோடியில் அமைக்கப்படும். மேலும், கோடைகாலங்களில் சாகுபடிக் குறைவால் ஏற்படும் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும் முக்கிய காய்கறிகளை ஏப்ரல், மே மாதங்களில் சாகுபடி செய்திட ரூ.10.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


ரூ.52.44 கோடியில் சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்கப்படும். ரூ.108.6 கோடி ஒதுக்கீட்டில் உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். 56 வண்ணமீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க ரூ.1.55 கோடி மானியம் ஒதுக்கப்படும். 


5 காளாண் உற்பத்தி நிலையங்கள்:


ரூ.8 கோடி நிதி ஒதுக்கீட்டில், 50 உழவர் சந்தைகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல். வேளாண் நிலமற்ற பட்டியலினத்தவருக்கு வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வாங்க மத்திய காலக் கடன்கள் மற்றும் மூலதனக் கடன் வழங்கப்படும். புரதச்சத்து நிறைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.