முதல்வர் கெஜ்ரிவாலை விடுவிக்க கோரி.. தமிழ்நாடு ஆம் ஆத்மி தலைவர் வசீகரன்.. 7வது நாளாக உண்ணாவிரதம்

Su.tha Arivalagan
Aug 21, 2024,10:52 AM IST

சென்னை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக் கோரி ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரை மதிமுக பொதுச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்தனர். உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கோரிக்கை வைத்தனர்.


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தல் சமயத்தில் உச்சநீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது. இதையடுத்து அவர் விடுதலையாகி வெளியே வந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் கடைசிக் கட்ட தேர்தலுக்கு முன்பு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தொடரந்து சிறையில் இருந்து வருகிறார் கெஜ்ரிவால்.




இந்த நிலையில் கெஜ்ரிவால் கைதைக்  கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், தமிழ்நாடு ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 7வது நாளாக இன்றும் அவரது உண்ணாவிரதம்,  சென்னை ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் தொடர்கிறது. முன்னதாக நேற்று மதிமுக பொதுச் செயலாளர் துரை வைகோ, வசீகரனை நேரில் சந்தித்து அவரது போராட்டத்துக்கு ஆறுதலும், வாழ்த்தும் தெரிவித்தார். அதேசமயம், உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கோரிக்கை வைத்தார்.


இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறுகையில்,  மத்திய அரசின் சர்வாதிகார போக்கு தலைவிரித்தாடுகிறது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் நடத்தும் இந்தப் போராட்டத்துக்கு மதிமுக எப்போதும் ஆதரவாக இருக்கும். அதேசமயம், உடல் நலம் கருதி இந்த போராட்டத்தைக் கைவிடுமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.  இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் கெஜ்ரிவால். குறுகிய காலத்தில் உயர்ந்த இடத்தை அடைந்தவர். அவரது வளர்ச்சியை, ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை விரும்பாத மத்திய பாஜக அரசு அதை முடக்கும் நோக்கில், பழிவாங்கும் வகையில் இதுபோல நடந்து வருகிறது. கெஜ்ரிவால் இந்த அடக்குமுறைகளை முறியடித்து மீண்டும் வெளியே வருவார். மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார். அவரது குரல் தொடர்ந்து மக்களுக்காக ஒலிக்கும் என்று கூறினார்.


தனது போராட்டம் குறித்து வசீகரன் கூறுகையில், அடக்குமுறை மூலம், கைது நடவடிக்கையின் மூலம் ஆம் ஆத்மியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் முடக்கி விடலாம் என்று பாஜக கருதுகிறது. அது நடக்காது. கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து அகில இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளும், தலைவர்களும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்