சினிமாவிலிருந்து அரசியலுக்கு.. டாப்புக்குப் போனது ஜஸ்ட் 2 பேர்தான்... எம்ஜிஆர், ஜெயலலிதா!

Su.tha Arivalagan
Feb 04, 2024,07:27 AM IST

சென்னை: சினிமாவிலிருந்து வரும் எல்லோருக்குமே எம்ஜிஆர் ஆகி விட வேண்டும் என்பதுதான் கனவாகவும், லட்சியமாகவும், வெறியாகவும் இருக்கிறது. ஆனால் இதுவரை 2 பேருக்கு மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் உயரிய இடத்தைக் கொடுத்துள்ளனர். ஒருவர் எம்ஜிஆர், இன்னொருவர் ஜெயலலிதா. இவர்களுக்கு அடுத்த இடம் என்று வேண்டுமானால் விஜயகாந்த்தைக் கூறிக் கொள்ளலாம்.


இன்னொரு எம்ஜிஆர், ஜெயலலிதாவை தமிழ்நாட்டு அரசியலும் பார்க்கவில்லை, தமிழ்நாட்டு மக்களும் அந்த வாய்ப்பை யாருக்கும் தரவில்லை.


சினிமா கவர்ச்சி மட்டுமே ஒருவர் அரசியலில் வெல்ல போதுமா என்றால்.. நிச்சயமாக இல்லை என்பதே கடந்த கால வரலாறுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.  எம்ஜிஆருக்குக் கொடுத்த இடத்தை மற்றவர்களுக்கு மக்கள் தர மறுத்து வருவது தொடர்கதையாக நீள்கிறது.


சிவாஜி கணேசன்




சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகரை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை.. எம்ஜிஆருக்கு நிகரான செல்வாக்குடன் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.. ஆனால் அவர் அரசியலுக்கு வந்தபோது.. வரலாறு காணாத தோல்வியைத்தான் மக்கள் அவருக்குக் கொடுத்தனர்.. காரணம் சிவாஜியை நடிப்பில் எம்ஜிஆரை விட உயர்ந்த இடத்தில் வைத்திருந்த மக்களுக்கு, அரசியலில் எம்ஜிஆருக்கு அடுத்த இடத்தைக் கூட கொடுக்க மனம் வரவில்லை.


சிவாஜி தனது நிலையை உணர்ந்த பிறகு உடனடியாக தான் அரசியலுக்கு லாயக்கில்லை என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொண்ட பெருந்தன்மையாளர். மீண்டும் சினிமாவின் பக்கம் முழு கவனத்தையும் செலுத்தியவர். அதனால்தான் இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் சிவாஜி கணேசன்.


சிவாஜிக்குப் பிறகு பல நடிகர்கள் அரசியல் பக்கம் வந்தனர். கே. பாக்யராஜ் வந்தார்.. பெரிய அளிவில் சோபிக்க முடியவில்லை.. ஒதுங்கி விட்டார். டி.ராஜேந்தர் வந்தார்.. பெரிதாக விஸ்வரூபம் எடுக்க முடியவில்லை. இப்போதும் அரசியலில் இருக்கிறார்.. ஆனால் "இருக்கிறார்".. அவ்வளவுதான்.


சரத்குமார் - கார்த்திக்




சரத்குமார் கட்சி ஆரம்பித்தார்.. பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் எம்எல்ஏவாக கூட அவரால் வர முடியவிலலை என்பது துரதிர்ஷ்டவசமானது. நடிகர் கார்த்திக்குக்கு கூடிய கூட்டம் ஒரு காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படு வேகமாக உயர்ந்த அவர் அதே வேகத்தில் பாதாளத்திற்குப் போய் விட்டார். ஏன் புயல் போல வந்தார்.. ஏன் இப்படி ஆனார் என்பது ஆச்சரியமே.. ஆனால் அவரது வீழ்ச்சிக்கு அவர்தான் காரணமே தவிர வேறு யாரும் காரணமில்லை.


கருணாஸ் கூட கட்சி ஆரம்பித்தார்.. இப்போதும் அந்தக் கட்சி இருக்கிறது. அதிமுக புண்ணியத்தால் எம்எல்ஏ ஆனார். ஆனால் அதன் பிறகு அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார்.  இப்படி பல நடிகர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


கமல்ஹாசன்




கமல்ஹாசன் ஆரம்பித்த கட்சிக்கு, சமீப காலங்களில் வேறு எந்த நடிகருக்கும்  இல்லாத அளவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக நடுத்தர தட்டு மக்கள், படித்தவர்களிடையே அவரது கட்சிக்கு பெரும் எதிர்பாப்பு இருந்தது. அவரும் எவ்வளவோ முட்டி மோதித்தான் பார்த்தார். ஆனாலும் இதுவரை அவரது கட்சிக்கு பெரிய வெற்றி என்று எதுவும் கிடைக்கவில்லை.


கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குகளையும் அவர் பெற்று வருகிறார். ஆனால் தீவிர அரசியலில் கமல்ஹாசன் இன்னும் இறங்கவில்லை. இடை இடையே நடிக்கவும் போய் விடுகிறார். பிக் பாஸையும் விடாமல் தொடர்கிறார். அவர் சீரியஸாக களத்தில் இறங்கினால் ஒரு வேலை அரசியலில் ஏதாவது சாதிக்க வாய்ப்பு உண்டு.


விஜயகாந்த்




இந்த வரிசையில், தேமுதிகவை நிறுவியரான விஜயகாந்த் மட்டும் சற்று விதி விலக்காக இருந்தார். எம்ஜிஆர் முதல்வர் ஆனார் என்றால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை உயர்ந்தார். அதிகபட்ச பதவிகளைப் பிடித்த நடிகர்கள் வரிசையில் எம்ஜிஆருக்கு முதலிடம் என்றால், விஜயகாந்த்துக்கு 2வது இடத்தைக் கொடுக்கலாம். ஆனால் அதுவும் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவின் புண்ணியத்தால் கிடைத்த பதவிதான்.. ஒரு வேளை அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் போயிருந்தால் இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.


எம்ஜிஆருக்கு அவரது ரசிகர்கள் மட்டும் பலமில்லை.. சாமானிய மக்கள், ஏழை, எளியவர்கள், பெண்கள் என அடித்தட்டு மக்களிடையே மிகப் பெரிய ஆதரவு இருந்தது. அந்த செல்வாக்குதான் திமுகவை பல வருடம் பாடாய்படுத்தவும் எம்ஜிஆருக்கு உதவியது. இத்தகைய ஆதரவு அப்போதும் எந்த நடிகருக்கும் இல்லை.. அதன் பிறகும் யாருக்கும் கிடைக்கவில்லை.


இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் அரசியலுக்குள் வந்துள்ளார்.  தனது முன்னோர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பாடம் என்று அவர் தனது அறிக்கையில் கூறியது கூட தனக்கு முன்பு சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் குறித்துததான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதாக கருதப்படுகிறது. எனவே அவர்கள் செய்த தவறுகளை தான் செய்யாமல், வெற்றி பெறுவேன் என்பதைத்தான் விஜய் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது.


விஜய் சாதிப்பாரா?




ரஜினிக்கு மிகப் பெரிய வாய்ப்பு தேடி வந்தபோது அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு வேளை பயன்படுத்தியிருந்தால் அவரது செல்வாக்கு என்ன என்பது பல வருடங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும்.. அந்த வாய்ப்பை அவர் மட்டும் இழக்கவில்லை.. மக்களும் கூட இழந்து விட்டனர். இப்போது ரஜினி அந்த ஸ்டேஜை தாண்டிப் போய் விட்டார்.


விஜய் வந்துள்ளார்.. ரசிகர்கள் ஆதரவோடு, மக்களின் ஆதரவையும் அவர் பெற வேண்டும்.. அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவதை விட நம்பிக்கையைப் பெற வேண்டியது முக்கியம்.. மக்களுக்கு நிச்சயம் மாற்றம் தேவைதான்.. அந்த மாற்றத்திற்காக அவர்கள் இன்று வரை ஏங்கிக் கொண்டுதான் உள்ளனர். ஒரு வேளை அதை விஜய்யால் தர முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தால்.. அவர்கள் விஜய்யின் பக்கம் திரண்டு வருவார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்.